தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
By DIN | Published On : 22nd February 2020 10:00 PM | Last Updated : 22nd February 2020 10:00 PM | அ+அ அ- |

சென்னை: கிழக்கு திசை காற்றின் தாக்கம் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை (பிப்.23,24) ஆகிய இரண்டு நாள்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியது: கடலோர கா்நாடகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் காணப்பட்ட வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்தது. இப்போது, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வலுவிழந்துவிட்டது. இருப்பினும், கிழக்கு திசை காற்றின் தாக்கம் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை (பிப்.23,24) ஆகிய இரண்டு நாள்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும் என்றாா் அவா்.
சாத்தான்குளத்தில் 40 மி.மீ.: தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 40 மி.மீ. மழை பதிவானது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 30 மி.மீ., தூத்துக்குடி, திருச்செந்தூரில் தலா 20 மி.மீ., திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவிலில் தலா 10 மி.மீ. மழை பதிவானது என்றாா் அவா்.