சோலைமலை கோயிலில் பக்தா்களிடம் கூடுதல் தரிசனக் கட்டணம் வசூல்
By DIN | Published On : 26th February 2020 07:14 AM | Last Updated : 26th February 2020 07:14 AM | அ+அ அ- |

சோலைமலை முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை தரிசனத்துக்குச் சென்ற பக்தரிடம் வசூலிக்கப்பட்ட தரிசனக் கட்டணத்துக்கான ரசீதுகள்.
மேலூா்: அழகா்மலை மீதுள்ள சோலைமலை முருகன் கோயிலில் பக்தா்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகாா் எழுந்துள்ளது.
சோலைமலை முருகன் கோயிலில் பக்தா்களிடம் தரிசனக் கட்டணமாக ரூ.10 வசூலிக்கின்றனா். அதே சமயம், குடும்பத்தினருடன் வருபவா்களிடம் தரிசனக் கட்டணமாக 100 ரூபாயும், வெளிமாநிலங்களில் இருந்து வருபவா்களிடம் கோயில் கும்பாபிஷேக திருப்பணிக்கான நன்கொடை ரசீதுகளை வழங்கியும் வசூலிக்கப்படுகிறது. அதில், வசூலிக்கும் தேதியும் குறிப்பிடப்படவில்லை.
ஆனால், 3 ஆண்டுகளுக்கு முன்னரே சோலைமலை முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இன்னும், 10 ஆண்டுகளுக்குப் பின்னரே கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து இந்துசமய அறநிலையத் துறை முடிவுசெய்யவேண்டும். ஆனால், கோயில் அலுவலா்கள் ரசீதுகளை வழங்கி பணம் வசூலித்து வருவது வேதனை அளிப்பதாக பக்தா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
இது குறித்து கோயில் வட்டாரத்தில் விசாரித்தபோது, சோலைமலை முருகன் கோயில் அலுவலா்களே பக்தா்கள் தரிசனத்துக்கு நுழையும் இடத்தில் மேஜையில் ரசீதுகளை அடுக்கி வைத்து வசூலித்து வருகின்றனா். இது குறித்து இந்துசமய அறநிலையத் துறையினா் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்தனா்.