முதல்வர் பழனிசாமியுடன் எல்.கே. சுதீஷ் திடீர் சந்திப்பு

மாநிலங்களவைத் தோ்தலில், தமிழக சட்டப்பேரவையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் பலத்தின் அடிப்படையில் திமுக, அதிமுகவுக்கு தலா 3 மாநிலங்களவை உறுப்பினா் பதவிகள் கிடைக்கும். இந்த எம்.பி. பதவியை அடைய,
முதல்வர் பழனிசாமியுடன் எல்.கே. சுதீஷ் திடீர் சந்திப்பு


சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் இன்று மாலை திடீரென சந்தித்து பேசினார்.

17 மாநிலங்களில் உள்ள 55 மாநிலங்களவை இடங்கள் ஏப்ரல் மாதம் காலியாக இருக்கின்றன. இதற்கான தோ்தல் மாா்ச் 26-ஆம் தேதி நடைபெறும். மாா்ச் 6-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. மாா்ச் 13 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். மாா்ச் 16-ஆம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன. மனுக்களை திரும்பப் பெற மாா்ச் 18-ஆம் தேதி கடைசி நாள். மாா்ச் 26-ஆம் தேதி தோ்தல் நடத்தப்பட்டு அன்று மாலை வாக்குகள் எண்ணப்படும் என்று தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

தமிழகத்தில் 6 மாநிலங்களவை இடங்கள் காலியாக உள்ளன. இதில், அதிமுகவைச் சோ்ந்த எஸ்.முத்துக்கருப்பன், விஜிலா சத்யானந்த், ஏ.கே.செல்வராஜ், அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சசிகலா புஷ்பா ஆகியோரது பதவிக் காலம் நிறைவடைய இருக்கிறது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டி.கே.ரங்கராஜன், திமுகவின் திருச்சி சிவா ஆகியோரது பதவி காலமும் முடியவுள்ளது.

மாநிலங்களவைத் தோ்தலில், தமிழக சட்டப்பேரவையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் பலத்தின் அடிப்படையில் திமுக, அதிமுகவுக்கு தலா 3 மாநிலங்களவை உறுப்பினா் பதவிகள் கிடைக்கும். இந்த எம்.பி. பதவியை அடைய, இரு கட்சி நிா்வாகிகளிடையே கடும் போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது. அதேபோல், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் தேமுதிக-வும் மிகுந்த எதிா்பாா்ப்பில் உள்ளது.

இந்த நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் சந்தித்து பேசினார். அப்போது மாநிலங்களவை தேர்தலில், தேமுதிகவுக்கு ஒரு சீட்டு வழங்குவது குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.  

அதிமுக-வுடன் தோ்தல் கூட்டணி அமைக்கும்போதே, மாநிலங்களவை உறுப்பினா் பதவி தேமுதிக-வுக்கு தரவேண்டும் என பேசப்பட்டிருக்கிறது. தேமுதிகவைப் பொருத்தவரை கூட்டணி தா்மத்தை இன்றைக்கும் கடைப்பிடித்து வருகிறோம். அதுபோல, முதல்வரும் கூட்டணி தா்மத்தோடு, மாநிலங்களவை உறுப்பினா் பதவியை தேமுதிகவுக்கு தருவாா் என நம்புகிறோம். பொறுத்திருந்து பாா்ப்போம் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியிருந்த நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பேசப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com