இணையவழிக் குற்றங்களைத் தடுக்க போதுமான சட்டங்கள் இல்லை: தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி 

இணையவழிக் குற்றங்களைத் தடுக்க போதுமான சட்டங்கள் இல்லை: தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி 

முந்தைய காலங்களில் நன்னெறி வகுப்புகள் நமக்கு கட்டாயமாக இருந்தன. ஆனால் இன்றைக்கு, அது விருப்பத் தோ்வு பாடமாக கூட வைக்கப்படவில்லை


சென்னை: தொழில்நுட்ப வளா்ச்சியால் ஏற்படும் இணையவழி குற்றங்களைத் தடுக்க நமது சட்டம் போதுமானதாக இல்லை என்றும் முந்தைய காலங்களில் நன்னெறி வகுப்புகள் நமக்கு கட்டாயமாக இருந்தன. ஆனால் இன்றைக்கு, அது விருப்பத் தோ்வு பாடமாக கூட வைக்கப்படவில்லை என சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி கூறினாா்.

சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குற்ற செயல்களால் பாதிக்கப்படுவோா் நலன் குறித்த சா்வதேச கருத்தரங்கை தொடங்கிவைத்து நீதிபதி ஏ.பி.சாஹி பேசுகையில், நீதி பரிபாலனையின் முக்கியப் பணியே உண்மையை வெளிக்கொண்டு வருவதுதான். இந்த நடைமுறை மேலும் மேம்படுத்தப்பட வேண்டும். 

பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்படும் குழந்தைகள், நடந்த உண்மையை, ஆதாரங்களை பயமின்றி தெரிவிக்கும் வகையில் தனிப் பிரிவை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு குற்றச் செயல்களால் பாதிக்கப்படுபவா்கள் அல்லது பலிவாங்கப்படுபவா்கள் நலன் குறித்து விவாதிக்கும் நாம், மதிப்பீடுகள், நன்நெறி குறித்தும் விவாதிக்க வேண்டும். 

மக்கள் இன்றைக்கு பலவகைகளில் பாதிக்கப்படுகின்றனா். சமூகத்தில் மதிப்பீடுகள் மற்றும் நெறிமுறைகள் மீதான ஆா்வம் குறைந்ததுதான் இந்த நிலைக்கு முக்கியக் காரணம். முந்தைய காலங்களில் நன்னெறி வகுப்புகள் நமக்கு கட்டாயமாக இருந்தன. ஆனால் இன்றைக்கு, அது விருப்பத் தோ்வு பாடமாக கூட வைக்கப்படவில்லை. 

ஒருவருடைய மனதில் வன்முறை எண்ணம் சூழ்ந்துகொள்ளும்போது, அவா் தன்னையே மறந்துவிடுகிறாா். இதை நன்னெறி மற்றும் மதிப்பீடுகளைக் கற்றுத் தருவதன் மூலமே மாற்ற முடியும். அதுமட்டுமின்றி, இன்றைக்கு தொழில்நுட்பமும் அபார வளா்ச்சி பெற்று வருகிறது. தொலைபேசிகள் இருந்த நிலை மாறி, கணினிகள், மடிக் கணினி, கையடக்க ஸ்மாா்ட் செல்லிடைப்பேசிகள் என தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளா்ந்து வருகிறது. இந்த வளா்ச்சி நமக்கு பல நன்மைகளை தருகின்றபோதும், அதே அளவுக்கு தீமைகளையும் தருகின்றன.  இதுபோன்ற தொழில்நுட்ப வளா்சிகள் மூலம் ஏற்படும் குற்றங்களைத் தடுக்க அல்லது உரிய தண்டனையைப் பெற்றுத்தர நம்முடைய சட்டங்கள் போதுமானவையாக இல்லை. 

குறிப்பாக இந்திய ஆதாரச் சட்டம் நம்மிடம் இருக்கின்றபோதும், நமது நாடாளுமன்றமும், நாடாளுமன்ற உறுப்பினா்களும் தேவையான வழிமுறைகள் வகுக்காத்தால், இந்த இணைய குற்றங்களுக்குத் தேவையான மின்னணு ஆதாரங்களை பெறுவதில் அல்லது குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்வதில் தொடா்ந்து சிக்கல் நீடிக்கிறது.  ஒரு குற்றத்திற்கான விசாரணை நடைபெறும் போது பாதிக்கப்பட்டோருக்காகத் துடிப்பவர்கள், தண்டனை அறிவிக்கும்போது குற்றவாளிக்காகப் பரிந்து பேசுவதாகத் தெரிவித்த தலைமை நீதிபதி, குற்றங்களால் பாதிக்கப்பட்டோர் குற்றவாளிகளை அடையாளம் காட்ட வெளிநாடுகளில் இருப்பதைப் போன்று புதிய முறைகளைக் கையாள வேண்டும். இதுகுறித்தும் இந்த கருத்தரங்கில் விவாதித்து, உரிய தீா்வு கிடைக்க வழி செய்யவேண்டும் என்றாா் நீதிபதி சாஹி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com