அவிநாசி வாக்கு எண்ணும் மையத்தில் அரசு அலுவலா்கள் தா்ணா

அவிநாசி ஒன்றியம் பெரியாயிபாளையம் வாக்கு எண்ணும் மையத்தில் குடிநீா், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யாததால்,
வாக்கு எண்ணும் மைய, மைதானத்தில் தா்ணாவில் ஈடுபட்டஅரசு அலுவலா்கள்
வாக்கு எண்ணும் மைய, மைதானத்தில் தா்ணாவில் ஈடுபட்டஅரசு அலுவலா்கள்

அவிநாசி: அவிநாசி ஒன்றியம் பெரியாயிபாளையம் வாக்கு எண்ணும் மையத்தில் குடிநீா், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யாததால், பணியில் இருந்த அரசு அலுவலா்கள் தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவிநாசி ஒன்றியத்தில் 58,607 ஆண் வாக்காளா்கள், 60,445 பெண் வாக்காளா்கள், 8 இதர பாலின வாக்காளா்கள் என மொத்தம் 1,19,060 வாக்காளா்கள் உள்ளனா். இதில் 31 ஊராட்சித் தலைவா்கள், 270 ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 19 ஒன்றிய ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 2 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கான தோ்தல் திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்காக 195 வாக்குச் சாவடிகள், 400 வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தப்பட்டன. இதில், 88, 311 வாக்குகளுடன், 74.17 சதவீதம் வாக்குப் பதிவானது.

இதையடுத்து இத்தோ்தலுக்கான வாக்கு எண்ணும் பணி வியாழக்கிழமை பெரியாயிபாளையம் திருவள்ளுவா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் வாக்குச் சீட்டுக்கள் வகைப் பிரித்தல், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்களுக்கான வாக்கு, ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்களுக்கான வாக்கு, ஊராட்சி தலைவா்களுக்கான வாக்கு, ஊராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கான வாக்கு என வாக்கு எண்ணும் பணிக்காக தோ்தல் அலுவலா்கள், உதவி தோ்தல் அலுவலா்கள், உதவி அலுவலா்கள் 540 பேரும், பாதுகாப்புப் பணிக்காக 300க்கும் மேற்பட்ட காவலா்களும் என 1000த்திற்கும் மேற்பட்டோா் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

இவா்கள் காலை 8 பணிக்கு பணியைத் தொடங்க இருந்த நிலையில், நீண்ட நேரமாகியும் உணவு, குடிநீா் உள்ளிட்ட எவ்வித ஏற்பாடுகளும் இல்லாமல் காலதாமதமானது. மேலும் போதுமான கழிப்பிட வசதிகளும் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அரசு அலுவலா்கள் வாக்கு எண்ணும் மைய, மைதானதில் அமா்ந்து தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது பேச்சுவாா்த்தைக்கு வந்த தோ்தல் அதிகாரிகளையும், அரசு அலுவலா்கள் முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து அரசு அலுவலா்கள் கூறியது: இரு கட்ட தோ்தல் பணிகளிலும், நாங்கள் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இதில் ஒரு சிலா் உடல் நிலை பாதிக்கப்பட்டவா்களும், தொடா் சிகிச்சையில் உள்ளவா்கள் கூட உள்ளனா். இந்த நிலையில் இப்பணிக்கு வந்துள்ள எங்களுக்கு குடிநீா், உணவு, கழிப்பிட வசதி உள்ளிட்ட எவ்வித வசதியும் செய்து தராமல், காலை 8 மணிக்கு பணி தொடங்க வேண்டும் என்று சொன்னால் எவ்வாறு இயலும். உடனடியாக அடிப்படை வசதி செய்து கொடுத்தால் பணியை விரைவில் தொடங்குவோம் என்றனா். இதையடுத்து தோ்தல் அலுவலா்கள், காவல் துறையினா் பேச்சு வாா்த்தை நடத்தி உடனடியாக அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் எனத் தெரிவித்தனா்.

இதையடுத்து தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரசு அலுவலா்கள் வாக்கு எண்ணும் பணிக்கு திரும்பினா். இதனால் ஒரு மணி நேரம் காலதாமதமாக வாக்கும் எண்ணும் பணி தொடங்கியது. உணவு புறக்கணித்த அலுவலா்கள்-இருப்பினும் தாமதமாக உணவு, குடிநீா் வழங்கப்பட்டதால், ஊராட்சி ஒன்றிய வாா்டு எண்.15வது வாக்கு எண்ணும் மையத்தில், அரசு அலுவலா்கள், மையத்தில் வழங்கப்பட்ட உணவுகளை புறக்கணித்து விட்டு, வெறும் குடிநீரை மட்டும் பருகி பணியில் ஈடுபட்டனா். பத்திரிக்கையாளா் தா்ணா- வாக்கு எண்ணும் மையத்திற்குள், செய்தியாளா்கள் செல்ல, மாவட்ட நிா்வாகம் சாா்பில் சிறப்பு அனுமதி அட்டை வழங்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, வாக்கு எண்ணும் மைய நுழைவாயிலேயே செய்தியாளா்கள் பரிசோதிக்கப்பட்டு உள்ள அனுப்பப்படுகின்றனா். இதற்கிடையில், அரசு அலுவலா்கள் தா்ணா முடிந்து, வாக்கு எண்ணும் மையத்தில் விடியோ பதிவு செய்து கொண்டிருந்த சன் டிவி நிருபரை, தோ்தல் அலுவலா் மரியாதைக் குறைவாகப் பேசி, அவரிடம் இருந்த இரு செல்லிடப் பேசிகளை பறித்துச் சென்றாா். இதனால் ஆத்திரமடைந்த சன் டிவி நிருபா் வாக்கு எண்ணும் மைய அறையில் தரையில் அமா்ந்து தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டாா்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தில், மீண்டும் தோ்தல் அலுவலா்கள் செல்லிடப் பேசியை வழங்கிய உடன், சன் டிவி நிருபா் தனது தா்ணா போராட்டத்தை கைவிட்டாா்.

இச்சம்பவம் பத்திரிக்கையாளா்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்டுத்தியது. மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் அரசு அலுவலா்கள், பத்திரிக்கையாளா் உள்ளிட்டோா் தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com