ஆர்எஸ்எஸ், ஏபிவிபி குண்டர்கள் திட்டமிட்டு நடத்திய தாக்குதல்: அய்ஷி கோஷ் பரபரப்பு பேட்டி

சிஏஏ எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்ட மத்திய அரசிற்கு எதிரான நிலைப்பாடு காரணமாக தில்லி  ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யூ)
ஜேஎன்யு மாணவர் சங்கத்தலைவர் அய்ஷி கோஷ்
ஜேஎன்யு மாணவர் சங்கத்தலைவர் அய்ஷி கோஷ்


புதுதில்லி: ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யூ) விடுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை (ஜன.5) மாணவர்கள் மீது  தாக்குதல் நடத்திய வன்முறையாளர்களை காவலாளிகள் தடுக்கவில்லை என்றும், இதுவொரு திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்  என வான்முறையாளர்கள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த ஜேஎன்யு மாணவர் சங்கத்தலைவர் அய்ஷி கோஷ் தெரிவித்துள்ளார். 

சிஏஏ எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்ட மத்திய அரசிற்கு எதிரான நிலைப்பாடு காரணமாக தில்லி  ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யூ) எப்போதும் பிரபலமாக இருக்கும். இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பல்கலைக்கழத்தின் மாணவ, மாணவிகள் விடுதியில் புகுந்த நூற்றுக்கு மேற்பட்ட முகமூடி அணிந்த கும்பல் மாணவர்கள், மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவ பிரிவான ஏபிவிபி மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.  இந்த தாக்குதலின் போது மாணவிகள் கெஞ்சியும் கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் பெண்களும் சேர்ந்துகொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். 

இந்த சம்பவம்  மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல் குறித்து அதிரவைக்கும் தகவல்கள், விவரங்களும் தற்போது வெளியாகி உள்ளது. 

இந்நிலையில், மாணவ, மாணவி விடுதிகளில் வன்முறையாளர்கள் நடத்திய தாக்குதல் குறித்து ஜேஎன்யு மாணவர் சங்கத்தலைவர் அய்ஷி கோஷ் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜேஎன்யூ விடுதியில் இருந்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது வன்முறையாளர்கள் நடத்திய தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது. 

சபர்மதி விடுதியில் போராடத்தயாராக இருந்தபோது தாக்குதல் நடந்துள்ளது. முகமூடி அணிந்துவந்த வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்திய போது பெயரைச் சொல்லியே உருட்டுக்கட்டை, கிரிக்கெட் மட்டை, இரும்புக் கம்பிகள், சுத்தியல் ஆகியவற்றை பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர்.  இதுபோன்ற கண்மூடித்தனமான தாக்குதலை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. வன்முறையாளர்களை காவலாளிகள் தடுக்கவில்லை. காவலாளிகளுக்கும், தாக்குதல் நடத்தியவர்களுக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்துள்ளது. 

இந்த தாக்குதல் ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஏபிவிபி குண்டர்களின் திட்டமிட்டு நடத்திய தாக்குதலாகும். தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 4-5 நாட்களாகவே விடுதி வளாகத்தில் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது. சில ஆர்எஸ்எஸ் தொடர்புடைய பேராசிரியர்கள் மற்றும் ஏபிவிபி  அமைப்பினரின் ஊக்குவிப்பின் பேரிலே, மாணவர்கள் மீது இந்த கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.  

ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஏபிவிபி குண்டர்களின் திட்டமிட்டு நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்கலை துணைவேந்தர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று  அய்ஷி கோஷ் கூறினார். 

வன்முறைக்கு தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களும் ஆசிரியர்களும் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com