சிகரெட்டுகள் மனநலத்துக்கும் தீங்கு 

புகை பிடிக்கும் பழக்கம் உடல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன் மட்டுமின்றி மன நலனுக்கும் தீங்கு விளைவிக்கிறது
சிகரெட்டுகள் மனநலத்துக்கும் தீங்கு 

ஜெரூசலேம்: புகை பிடிப்பது உள்பட புகையிலையைப் பயன்படுத்தும் பழக்கங்கள் யாவும், உடல்ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மன நலனுக்கும் தீங்கு விளைவிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஒரு பக்கம் மருத்துவத் துறை வளர்ச்சி பெரிய அளவில் இருந்தாலும், மறுபக்கம் நாளுக்கு நாள் புதுப்புது நோய்கள், புதுப்புது பெயர்களுடன் வந்து நம்மை அச்சுறுத்தினாலும், நோய்களுக்கு ஏற்ப மருந்து சாப்பிட்டாலும் அவ்வளவு எளிதில் அவை குணமடைவது இல்லை. மேலும் காலநிலைகளுக்கேற்ப மருந்தே கண்டுபிடிக்கப்படாத நோய்களும் அவ்வப்போது வந்து நம்மை மிரட்டி க் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் புகை பிடிப்பதால் ஏற்படும் உடல் ரீதியான பாதிப்பு குறித்து பி.எல்.ஓ.எஸ். ஒன் இதழ் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஜெரூசலேம் எபிரேய பல்கலைக்கழகம், பெல்கிரேட் பல்கலைக்கழகம் மற்றும் பிரிஸ்டினா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆய்வுக் குழுக்கள் சேர்ந்து, வேறுபட்ட சமூக-அரசியல் மற்றும் பொருளாதார சூழல்களுடன் செர்பிய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களிடம் ஆய்வு மேற்கொண்டது.

இதில், புகைபிடிக்காத மாணவர்களைவிட, புகைபிடிக்கும் மாணவர்களுக்கு இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகமாக மனச் சோர்வு இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். 

"புகைபிடித்தல் மற்றும் மனச்சோர்வு ஆகிய இரண்டும் நெருக்கமாக இணைந்திருக்கின்றன என்பதற்கான ஆதாரங்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது. "புகைபிடித்தல் மிக விரைவாக மனச்சோர்வை ஏற்படுத்துவதுடன், புகையிலை நம் மன நலனில் மோசமான விளைவை ஏற்படுத்தும் என்று ஆய்வின் முதல்நிலை நெறியாளர் ஹாகாய் லெவின் கூறினார். 

ஆய்வாளர்களின் கூற்றுப்படி, குறிப்பாக, பிரிஸ்டினா பல்கலைக்கழகத்தில் புகை பிடிப்பவர்களில் 14 சதவீதத்தினர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், புகை பிடிக்காதவர்களில் 4 சதவீதத்தினரே பாதிக்கப்பட்டுள்ளனர். பெல்கிரேட் பல்கலைக்கழகத்தில் இந்த எண்ணிக்கை முறையே 19 சதவீதம் முதல் 11 சதவீதம் வரை உள்ளது.

மேலும், அவர்களின் பொருளாதார அல்லது சமூக-அரசியல் பின்னணிகள் எதுவாக இருந்தாலும், புகைபிடிக்கும் மாணவர்களுடன், புகைபிடிக்காத மாணவர்களை ஒப்பிடும்போது அதிக மனச்சோர்வு அறிகுறிகள் காணப்பட்டதுடன் செயல்படு தன்மையும் குறைவாக இருந்தது. 

இந்த புதிய ஆய்வின்படி, புகை பிடிப்பதால் ஏற்படும் மனநல பாதிப்புகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள விரும்புவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

"வளாகங்களில் புகைபிடிப்பதைத் தடை செய்வது மட்டுமல்லாமல், புகையிலை பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு விளம்பரங்களைச் செய்வதன் மூலம் புகை இல்லாத வளாகங்களை உருவாக்கி மாணவர்களின் நலனுக்குப் பல்கலைக்கழகங்கள் உதவ  வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்," லெவின். 

மேலும், மது, புகைபிடித்தல் மற்றும் போதைப்பொருள் உள்ளிட்ட பழக்கத்தால் ஏற்படும் மனநலப் பிரச்னைகளைத் தடுப்பதற்காகவும், புகைபிடித்தல் நம் உடல் மற்றும் மனதிற்கு ஏற்படுத்தும் தீங்குகளை எதிர்த்துப் போராடுவதற்காகவும் விழிப்புணர்வு மற்றும் சிகிச்சையளிக்கும் திட்டங்களுடன் இணைந்து, நீண்ட தொலைவும் செல்ல வேண்டியுள்ளது என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com