முகப்பு தற்போதைய செய்திகள்
கழிவுநீர் தொட்டியில் விழுந்து இரு தொழிலாளர்கள் சாவு
By DIN | Published On : 20th January 2020 09:37 PM | Last Updated : 20th January 2020 09:37 PM | அ+அ அ- |

சென்னை: சென்னை அருகே நொளம்பூரில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து இரு தொழிலாளர்கள் இறந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
நொளம்பூர் அருகே ஜஸ்வந்த் நகர் ரெட்டி பாளையம் சாலையில் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் கழிவுநீரேற்றும் நிலையம் உள்ளது. இந்த நிலையத்தில் இருக்கும் ஒரு பெரிய கழிவுநீர் தொட்டியை இரும்பு கம்பிகள் மூடும் பணியில் பாடி என்.எஸ்.கே. தெருவைச் சேர்ந்த கண்ணன் (45), அதேப் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (24) ஆகியோர் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனர்.
இதற்காக அவர்கள், வெல்டிங் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென நிலைத்தடுமாறி பிரகாஷ், கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்தார். இதைப் பார்த்த கண்ணன், அவரைக் காப்பாற்ற முயன்றார். அப்போது அவரும், விஷவாயுவை நுகர்ந்ததால் மயங்கி தொட்டிக்குள் விழுந்தார்.
இதைப் பார்த்த அங்கிருந்த பிற தொழிலாளர்கள், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த தீயணைப்பு படை வீரர்கள், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக அம்பத்தூர் எஸ்டேட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.