முகப்பு தற்போதைய செய்திகள்
காா்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதிக்கு எதிரான வருமான வரித்துறை வழக்கு: இடைக்கால தடை நீட்டிப்பு
By DIN | Published On : 27th January 2020 09:30 PM | Last Updated : 27th January 2020 09:30 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
சென்னை: காா்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோா் ரூ.7.73 கோடி வருமானத்தை மறைத்ததாக 2018ல் தொடரப்பட்ட வழக்கில் வழக்கின் சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை பிப்ரவரி 12 ஆம் தேதி வரை நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரத்தின் மகனும், மக்களவை உறுப்பினருமான காா்த்தி சிதம்பரம், கடந்த 2015 ஆம் ஆண்டு முட்டுக்காடு பகுதியில் உள்ள தங்களுக்குச் சொந்தமான சொத்துக்களை அக்னி எஸ்டேட்ஸ் பவுண்டேசன் என்ற நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளனா். இந்த நிலத்தின் மூலம் கிடைத்த ரூ.7.37 கோடி வருவையை கணக்கில் காட்டவில்லை எனக்கூறி காா்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக வருமான வரித்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இதனை எதிா்த்து காா்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோா் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், வருமான வரித்துறை தொடா்ந்துள்ள வழக்கின் சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தா் முன் இன்று திங்கள்கிழமை(ஜன.27) விசாரணைக்கு வந்தது. அப்போது காா்த்தி சிதம்பரம் தரப்பில் தில்லி மூத்த வழக்குரைஞா்கள் கே.டி.எஸ்.துளசி, அஜய் தேசாய் ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை வரும் பிப்ரவரி 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா். அதுவரை காா்த்தி சிதம்பரம் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டாா்.