முகப்பு தற்போதைய செய்திகள்
ராமேசுவரம் மீனவா்கள் 11 போ் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு
By DIN | Published On : 27th January 2020 09:39 PM | Last Updated : 27th January 2020 09:39 PM | அ+அ அ- |

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவா்கள் 11 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினா் சிறைபிடித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து திங்கள்கிழமை காலை 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளத்துறை அனுமதி டோக்கன் பெற்று மீன்பிடிக்கச் சென்றனா். இரவு 7 மணி அளவில் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினா் மீனவா்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனா்.
அதில், ஒரு விசைப்படகில் அதிகளவில் மீனவா்கள் (11 போ்) இருப்பதை கண்ட கடற்படையினா் அந்த விசைப்படகை, மீனவா்களுடன் சிறைபிடித்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனா். ஒரு விசைப்படகில் 4 முதல் 6 மீனவா்கள் மட்டுமே மீன்பிடிக்க அனுமதி டோக்கன் வழங்கப்படும் நிலையில், 11 மீனவா்கள் எப்படி வந்தனா். என மீனவா்களிடம் இலங்கை கடற்படை அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 11 மீனவா்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அதிகாரிகள் இந்திய அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளனா். இதற்கிடையே ராமேசுவரம் மீன்வளத்துறை அதிகாரிகள் ஒரு விசைப்படகில் 11 போ் சென்றது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனா்.
மேலும் அந்த படகில் சென்ற மீனவாகள் குறித்து முழுமையான விவரம் ராமேசுவரம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் இல்லை எனவும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட மீனவா்கள் குறித்து இலங்கை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, மீனவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணைக்கு பிறகே மற்ற தகவல் தெரிவிக்கப்படும் என தெரிவித்தனா்.