முகப்பு தற்போதைய செய்திகள்
வடநாட்டவர்களை வெளியேற்றி, சுங்கச்சாவடிகளை மூடுக - சீமான்
By DIN | Published On : 27th January 2020 06:59 PM | Last Updated : 27th January 2020 06:59 PM | அ+அ அ- |

சீமான்(கோப்புப் படம்)
வடமாநிலத்தவர்களைச் சுங்கச்சாவடி ஊழியர்களாக நியமித்துத் தமிழர்களின் தன்மானத்தை உரசிப்பார்ப்பார்க்கும் வேலையை விடுத்திவிட்டு, வடநாட்டவர்களை வெளியேற்றி, சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், செங்கல்பட்டு, பரனூர் சுங்கச்சாவடியில் பணிபுரிந்த வடநாட்டைச் சேர்ந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் தமிழக அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது கோரத்தாக்குதல் தொடுத்து அவர்களின் மண்டை உடைக்கப்பட்ட செய்தி பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. அதற்குப் பின்விளைவாகவே, அச்சுங்கச்சாவடி உடைத்துத் தகர்க்கப்பட்டுள்ளது. நேற்று (ஜன.26) நாங்குநேரி சுங்கச்சாவடியிலும் இதே போல் பெண்கள் உள்ளிட்ட 5 பேர் சுங்கச்சாவடி ஊழியர்களால் தாக்கப்பட்டுள்ளனர்.
சுங்கச்சாவடி எனும் பெயரில் எவ்வித கணக்குவழக்குமில்லாமல் பகல் கொள்ளையடிக்கும் இந்தக் கட்டமைப்பையே நாம் முற்றாக எதிர்க்கிறோம். இது மக்களின் பொருளியல் வளத்தைச் சுரண்டி மிகை இலாபத்தில் ஊதிப்பெருக்கும் முதலாளித்துவ நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது.
சுங்கச்சாவடி அமைப்பே வேண்டாமென்று நாம் போராடிக் கொண்டிருக்கிற சூழலில் சுங்கச்சாவடி ஊழியர்களாக வடநாட்டவர்களைத் திட்டமிட்டு நியமத்துப் பயணிப்போரிடம் வாக்குவாதம் செய்வது அவர்களை ஆயுதங்களால் தாக்குவது எனத் தொடர்ச்சியாக நடைபெறும் செயல்கள் தமிழர்களின் தன்மானத்தை உரசிப் பார்ப்பதாகும்.
சிறுமி பிரித்திகா பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலை, செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் தமிழக அரசுப் பேருந்து ஊழியர்கள் மீது தாக்குதல் என தமிழகத்தில் வடநாட்டவர்களின் வன்முறைகளும், அத்துமீறல் போக்குகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. தமிழகத்திற்குப் பிழைப்பிற்கு வந்தவர்கள் தமிழக மண்ணின் மக்களைத் தாக்குகிறார்கள் என்றால், இதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அமைதியாகக் கடந்து செல்ல முடியாது.
மிழர்கள் மீதான வடநாட்டவர்களின் வன்முறையும், அடக்குமுறையும் இனியொரு முறை நிகழ்ந்தால் தமிழர் நிலம் வேறு மாதிரியான பின்விளைவுகளைத் தரும் என்ற எச்சரிக்கையுடன், முதற்கட்டமாகச் சுங்கச்சாவடி பணிகளுக்காக வந்துள்ள வடமாநிலத்தவர்களை உடனடியாகத் திருப்பி அனுப்ப வேண்டும். தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளை உடனடியாக மூட வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.