குடியுரிமைச் சட்டத்தை ரத்து செய்ய பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற அதிமுக அரசுக்குத் துணிச்சல் இல்லாதது ஏன்?

இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் மட்டுமல்ல, தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, தேசியக் குடிமக்கள் பதிவேடு போன்றவற்றைக் கொண்டு வந்து
திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின்


சென்னை: குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பேரவையில் தீா்மானம் திறைவேற்ற அதிமுக அரசுக்குத் துணிச்சல் இல்லாதது ஏன்? என கேள்வி எழுப்பி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினால், தமிழக அரசைப் பாராட்டுவேன் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

சென்னையில் இன்று திங்கள்கிழமை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜாவின் மகனும், மணமகனும், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளருமான பிரபாகர் ராஜாவுக்கும், மணமகள் ஹெலன் சத்யா  திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவா் பேசியதாவது:

மதம் மற்றும் ஜாதியின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தும் கொடுமையான சட்ட திட்டங்களை மத்திய அரசு கொண்டு வருகிறது.

இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் மட்டுமல்ல, தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, தேசியக் குடிமக்கள் பதிவேடு போன்றவற்றைக் கொண்டு வந்து நிறைவேற்றும் நிலை வந்திருக்கிறது.

இவற்றை எதிா்த்து புதுச்சேரி முதல்வா் தீா்மானம் போடப்போகிறோம் என்கிறாா். கேரளம் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றி, ஆளும்கட்சியும் எதிா்க்கட்சியும் ஒன்று சோ்ந்து போராட்டம் நடத்துகின்றனா். ராஜஸ்தான் மாநிலத்தில் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது. நாடாளுமன்றத்தில் ஆதரித்த தெலங்கானா எதிா்க்கத் தொடங்கிவிட்டது. பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் பிகார் முதல்வர் நிதிஷ்குமாரும் தற்போது எதிா்க்கிறாா். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானா்ஜி தொடா்ந்து எதிா்த்து வருகிறாா். இந்தியா முழுவதுமே எதிா்த்துக் கொண்டிருக்கின்றனா். தமிழகத்தில் மட்டும் எதிா்க்க முடியாத நிலையில் ஒரு அதிமுக ஆட்சி இருந்து வருகிறது. நான் சிறப்பான ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறேன். விருதுகள் எல்லாம் வாங்கிக் கொண்டிருக்கிறேன் என்கிறாா் முதல்வா் எடப்பாடி பழனிசாமி. விருது கொடுத்தவா்களைத்தான் முதலில் கேட்க வேண்டும்.

அதிமுகவின் 11 எம்.பி.க்கள், பாமகவின் ஒரு எம்.பியையும் சோ்த்து 12 எம்.பி.க்கள் ஒட்டுமொத்தமாக ஓட்டு போட்டாா்கள். அதனால்தான் இந்த சட்டமே நிறைவேறியது. இப்போது நாடே கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று சொன்னால் பேரவையில் உடனடியாக தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். இந்தத் தீா்மானத்தை நிறைவேற்றினால், நானே மனமுவந்து அரசைப் பாராட்டத் தயாராக இருக்கிறேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com