தோட்டத்திலேயே முதிர்ந்து வீணாகும் வெண்டைக்காய்: விலை வீழ்ச்சியால் அறுவடையை நிறுத்திய விவசாயிகள்

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் வெண்டைக்காய் விலை படுவீழ்ச்சி அடைந்ததால், விவசாயிகள் அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டு செல்வதை தவிர்த்து வருகின்றனர்.
தோட்டத்திலேயே முதிர்ந்து வீணாகும் வெண்டைக்காய்கள்.
தோட்டத்திலேயே முதிர்ந்து வீணாகும் வெண்டைக்காய்கள்.


வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் வெண்டைக்காய் விலை படுவீழ்ச்சி அடைந்ததால், விவசாயிகள் அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டு செல்வதை தவிர்த்து வருகின்றனர். இதனால் கேட்பாரற்றுப்போன வெண்டைக்காய்கள் தோட்டத்திலேயே முதிர்ந்து வீணாகி வருகின்றன.

வாழப்பாடி பகுதி கிராமங்களில் கிணற்றுப் பாசன வசதி கொண்ட பெரும்பாலான விவசாயிகள், நுண்நீர் பாசம், நிலப்போர்வை, கம்பி பந்தல் உள்ளிட்ட உத்திகளை பயன்படுத்தி, குறைந்த நீர் மற்றும் நிலப்பரப்பை பயன்படுத்தி, குறுகிய கால பணப்பயிரான தக்காளி, மிளகாய், கத்தரி, வெண்டை, வெங்காயம், புடலை, பீர்க்கன், பரங்கி, பூசனி, அவரை, கொத்தவரை, சுரைக்காய், முள்ளங்கி உள்ளிட்ட நாட்டு ரக காய்கறிகளை ஆண்டு முழுவதும் பயரிட்டு வருகின்றனர்.

இளையத் தலைமுறை விவசாயிகள், சமீபகாலமாக பீன்ஸ், பீட்ரூட், கேரட், முட்டைக்கோஸ், காளிஃபிளவர் உள்ளிட்ட ஆங்கிலக் காய்கறிகளையும் பயிரிடுகின்றனர். இதனால், சேலம் மாவட்டத்தில் காய்கறி உற்பத்தியில் வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

வாழப்பாடி தினசரி காய்கறி சந்தைக்கு சுற்றுப்புற கிராமங்கள் இருந்தும், அருநுாற்றுமலை, கல்வராயன் மலை கிராமங்களில் இருந்தும் அனைத்து ரக காய்கறிகளும் விற்பனைக்கு வருகிறது. உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி, சேலம் நாமக்கல், விழுப்புரம், கடலுார் மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகளும், வாழப்பாடிக்கு வந்து, விவசாயிகளிடம் ஏல முறையில் காய்கறிகளை கொள்முதல் செய்து செல்கின்றனர்.

விதை, உரம் விலை உயர்வு, கூலித் தொழிலாளர்கள் பற்றாக்குறை, பாசன நீர் தட்டுப்பாடு, கரோனா நோய் தொற்று பரவல் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களுக்கு இடையே, காய்கறிகளை உற்பத்தி செய்வது விவசாயிகளுக்கு பெரும் சவலாக இருந்து வருகிறது. இந்நிலையிலும், வாழப்பாடி பகுதி விவசாயிகள் காய்கறிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

வாழப்பாடி பகுதியில் ஏறக்குறைய 300 ஏக்கர் பரப்பளவில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் நிகழாண்டு வெண்டைக்காய் பயிரிட்டுள்ளனர். சேலம் மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களிலும் வெண்டைக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளதாலும், கொள்முதல் செய்வதற்கு வெளி மாவட்ட வியாபாரிகள் வரத்து குறைந்து போனதாலும், கடந்த சில தினங்களாக வாழப்பாடி, தலைவாசல் தினசரி சந்தைகள் மற்றும் சேலம், ஆத்துார் உழவர் சந்தைகளில் வெண்டைக்காய் விலை படுவீழ்ச்சி அடைந்துள்ளது.

குறிப்பாக, வாழப்பாடி தினசரி காய்கறி கமிஷன் மண்டிகளுக்கு வெண்டைக்காய் விற்பனைக்கு வரத்து அதிகரித்துள்ளதால், ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.4க்கும் குறைவாகவே விலை போகிறது. இதனால், உற்பத்தி செய்த வெண்டைக்காயை கூலித்தொழிலாளர்களை கொண்டு பறித்து, வாகனங்களில் விற்பனைக்கு கொண்டு செல்லும் செலவிற்கே போதிய தொகை கிடைக்கவில்லை.

இதனால், வாழப்பாடி பகுதியில் வெண்டைக்காய் பயிரிட்டுள்ள பெரும்பாலான விவசாயிகள், தோட்டத்தில் விளைந்துள்ள வெண்டைக்காய்களை அறுவடை செய்வதையே தவிர்த்து வருகின்றனர். எனவே, தினந்தோறும் ஒரு டன் அளவிற்கு வெண்டைக்காய் தோட்டத்திலேயே முதிர்ந்து வீணாகி வருகிறது. வெண்டைக்காய் பயிரிட்டு நஷ்டமடைந்துள்ள விவசாயிகளுக்கு, இழப்பீடு பெற்றுக்கொடுக்க வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மன்னாயக்கன்பட்டி மேலக்காடு விவசாயி  ராமச்சந்திரன் கூறியதாவது:
எனது தோட்டத்தில் 50 செண்ட் நிலத்தில் குறுகிய கால பணப்பயிரான வெண்டைக்காய் பயிரிட்டுள்ளேன். பயிரிட்டு உரமிட்டு, களைப்பறித்து, நீர்பாய்ச்சி தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு பராமரித்து வந்த நிலையில், வெண்டைக்காய் விளைந்து அறுவடைக்கு வரும் தருணத்தில் விலை படுவீழ்ச்சி அடைந்து விட்டது. 

தொழிலாளர்களை வைத்து பறித்து விற்பனைக்கு கொண்டு செல்லும் செலவிற்கே உரிய விலை கிடைக்காததால் அறுவடை செய்வதையே தவிர்த்து விட்டோம். இதனால், செடியிலேயே முதிர்ந்து வீணாகி வருகிறது. எனவே, வெண்டைக்காய் பயிரிட்டு இழப்பை ஏற்படுத்திக் கொண்ட விவசாயிகளுக்கு, அரசிடம் இருந்து நிவாரணத்தொகை பெற்றுக்கொடுத்த வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன் வரவேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com