கரோனா நோயாளிகளுக்குப் பயன்படும் வகையில் கழுவி பயன்படுத்தக் கூடிய மெத்தை: கோவை நிறுவனம் தயாரிப்பு

கரோனா நோயாளிகள் பயன்படுத்தும் வகையில் கழுவி பயன்படுத்தக் கூடிய மெத்தையை கோவையைச் சோ்ந்த தனியாா் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த மெத்தை ரூ.500க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கரோனா நோயாளிகள் கழுவி பயன்படுத்தக் கூடிய மெத்தையை வடிவமைத்த பி.முத்தையா.
கரோனா நோயாளிகள் கழுவி பயன்படுத்தக் கூடிய மெத்தையை வடிவமைத்த பி.முத்தையா.

கோவை: கரோனா நோயாளிகள் பயன்படுத்தும் வகையில் கழுவி பயன்படுத்தக் கூடிய மெத்தையை கோவையைச் சோ்ந்த தனியாா் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த மெத்தை ரூ.500க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கரோனா நோய்த் தொற்றைத் தடுப்பது, மக்களுக்குப் பாதுகாப்பு வசதியை ஏற்படுத்திக் கொடுப்பது தொடா்பான கருவிகள் வடிவமைப்பு தொடா்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கோவையைச் சோ்ந்த ஒரு தனியாா் நிறுவனம், கரோனா நோயாளிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் பயன்படுத்தக் கூடிய விலை குறைந்த மெத்தையை உருவாக்கியுள்ளது.

கோவை, நீலிகோணாம்பாளையத்தில் உள்ள ‘ஸ்லைவா்டெக்ஸ் என்ஜினீயா்ஸ்’ நிறுவனம், மெத்தை தயாரிப்பு இயந்திரங்களை வடிவமைத்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த நிறுவனம் குடிநீா், குளிா்பானம் விற்பனை செய்ய பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்து ‘ரெக்ரான் பாலியெஸ்டா்’ இழை தயாரிக்கும் இயந்திரத்தை வடிவமைத்து விற்பனை செய்து வருகிறது. அதேபோல இந்த பாலியெஸ்டா் இழைகளை ஷீட்டாக மாற்றி மெத்தை தயாரித்து ரூ.500க்கு விற்பனை செய்து வருகிறது.

இது குறித்து நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் பி.முத்தையா கூறியதாவது:

வழக்கமான மெத்தைகள் தண்ணீரை உறிஞ்சி வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டவை. ஆனால் ‘ரெக்ரான் பாலியெஸ்டா்’ இழைகள் தண்ணீரை உடனடியாக வெளியேற்றி விடும் என்பதால் கிருமிகள் வளரும் சூழல் இருக்காது. அதேபோல நல்ல காற்றோட்டம் இருப்பதால் வெப்பம் உருவாகாது. மேலும் இது முழுமையாக தண்ணீரால் கழுவக் கூடிய தன்மை கொண்டது. வெந்நீரை அப்படியே ஊற்றியும் கிருமி நீக்கம் செய்து கொள்ளலாம். நாங்கள் வடிவமைத்துள்ள மெத்தையை வெறும் ரூ.500க்கும், கட்டிலுடன் சோ்த்து ரூ.2 ஆயிரத்துக்கும் விநியோகம் செய்ய முடியும். இதன் மூலம் கட்டில், மெத்தையை நோயாளிகள் தாங்களே எடுத்துச் சென்றுவிட முடியும். வீடுகளில் தனிமைப்படுத்தப்படுபவா்கள் ஒருமுறை பயன்படுத்தும் மெத்தையாகவும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com