திருச்சியில் 300 இடங்களில் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்களின் சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக திருச்சியில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கங்கத்தினர்
திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கங்கத்தினர்

திருச்சி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்களின் சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக திருச்சியில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தனியார்மயத்தை எதிர்த்து வேலைநிறுத்தம் செய்துவரும் நிலக்கரி சுரங்க தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசின் மின்சார சட்டத் திருத்தம் 2020 திரும்பப் பெற வேண்டும். கரோனா காரணம் காட்டி டிஏ மற்றும் இஎல் சரண்டர் முடக்கம் செய்ததை உடனே வழங்க வேண்டும். வருங்கால வைப்பு நிதி சந்தா 12 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைப்பு கைவிடவேண்டும். மின் வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கரோனா நோய் பரவாமல் தடுக்க பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். 8 மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்துவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்து வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு மின்வாரிய அனைத்து சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தென்னூர், மன்னார்புரம், ஸ்ரீரங்கம், துறையூர், மணப்பாறை, முசிறி, லால்குடி உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரிவு அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. 

இதேபோல, பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து மாவட்டம் முழுவதும் 300 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. வங்கிகள், தபால்நிலையம், எல்ஐசி, பேருந்து நிலையம், ஜங்ஷன் ரயில் நிலையம், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதுதொடர்பாக, திருச்சி மாவட்ட ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலர் க. சுரேஷ் கூறியது: மத்திய தொழிற்சங்கங்களான தொமுச, சிஐடியு, ஐஎன்டியுசி, ஏஐடியுசி, ஹெச்எம்எஸ், ஏஐசிசிடியு, எல்எல்எஃப், எம்எல்எஃப் ஆகியவற்றின் அழைப்பை ஏற்று மாநில கட்சிகளின் தொழிற்சங்கங்கள், வங்கிகள், இன்சூரன்ஸ், அரசு ஊழியர் சங்கங்களையும் இணைத்து நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

தொழிலாளர் சட்டங்களை நீக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். பொதுமுடக்கக் காலத்தில் அனைவருக்கும் தலா ரூ.7,500 வீதம் மார்ச், ஏப்ரல், மே என 3 மாதங்களுக்கு வழங்க வேண்டும். வேலை நீக்கம், பணி குறைப்பு, ஊதிய நேரம் நீட்டிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வங்கிப் பணியாளர்கள், தபால் ஊழியர்கள், இன்சூரன்ஸ் ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர். 

நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திருச்சியில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com