டாடா சுமோ
டாடா சுமோ

ராமநாதபுரத்தில் காவலர் எனக் கூறி ஆசிரியரை கடத்திய மர்மக் கும்பல்!

ராமநாதபுரத்தில் காவலர் எனக்கூறி ஆசிரியரைக் கடத்திய மர்மக் கும்பலை காவலர்கள் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் காவலர் எனக் கூறி ஆசிரியரைக் கடத்திய மர்மக் கும்பலை காவலர்கள் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து காவலர்துறை தரப்பில் கூறப்படுவதாவது: ராமநாதபுரம் நகரில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி நடந்ததாக சில நாள்களுக்கு முன்பு புகார் எழுந்தது. அதனடிப்படையில் சென்னையைச் சேர்ந்த நீதிமணி, ராமநாதபுரம் பகுதி ஆசிரியரான ஆனந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நிதிநிறுவனம் நடத்தியவர்கள் பள்ளி ஆசிரியர்களைக் குறிவைத்தே பணத்தை முதலீடு செய்யவைத்து மோசடி செய்ததும் தற்போது தெரியவந்துள்ளது. ஏராளமான ஆசிரியர்களும் தாங்கள் பணம் செலுத்தி ஏமாந்ததாக தொடர்ந்து புகார் தெரிவித்தும் வருகின்றனர்.

ராமநாதபுரம் உச்சிப்புளியைச் சேர்ந்தவர் ஆரோக்கிய ராஜ்குமார். இவர் ராமநாதபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலை பிருந்தாவன் பகுதியில் குடியிருந்து வருகிறார். நிதிநிறுவன மோசடியில் கைதான ஆனந்துடன் பழக்கம் வைத்திருந்த ஆரோக்கிய ராஜ்குமார் தனக்குத் தெரிந்த பலரையும் நிதிநிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்துள்ளார்.

தற்போது நிதிநிறுவன மோசடி வழக்கில் ஆனந்த் கைதான நிலையில், அவரிடம் முதலீடு செய்ய சிபாரிசு செய்தவர்களையும் காவலர்கள் கண்காணித்து வருகின்றனர். 

இந்தநிலையில், கடந்த புதன்கிழமை (ஜூலை 1) நள்ளிரவில் ஆசிரியர் ஆரோக்கியராஜின் வீட்டுக்கு காவல் என எழுதப்பட்ட காரில் (டாடா சுமோ) வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை குண்டுக்கட்டாகத் தூக்கி காரில்
ஏற்றிச்சென்றுள்ளது.

கழுகூரணி உள்ளிட்ட பகுதிகளில் காரில் சுற்றிவந்த கும்பல், ஆசிரியர் ஆரோக்கியராஜை அடித்துத் துன்புறுத்தியதுடன், ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளது. கும்பலில் வந்தவர்கள் தங்களை காவலர்கள் என கூறியதுடன், விடிய விடிய ஆசிரியரை காரில் வைத்து சுற்றியவர்கள் பின்னர் வியாழக்கிழமை அதிகாலையில் ராமேஸ்வரம் சாலை போக்குவரத்து நகர் பகுதியில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர்.

மர்மக் கும்பலால் விடுவிக்கப்பட்ட ஆரோக்கியராஜ், குடும்பத்தினர் ஆலோசனைப்படி காவல் கண்காணிப்பாளரின் சிறப்பு குறைதீர்க்கும் செல்லிடப் பேசியில் தகவல் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் கேணிக்கரை காவல் நிலையத்தில் ஆரோக்கியராஜ் புகாரும் அளித்துள்ளார்.

புகார் அடிப்படையில் ராமநாதபுரம் நகர் காவல் துணை கண்காணிப்பாளர் கி.வெள்ளத்துரை மற்றும் கேணிக்கரை காவலர்கள் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர். 

ஆசிரியர் ஆரோக்கியராஜ் கடத்தப்பட்ட வழிகளில் உள்ள கண்காணிப்புக் காமிராக் காட்சிகளையும் காவலர்கள் சேகரித்து ஆராய்ந்து வருகின்றனர்.

ராமநாதபுரத்தில் தனியார் நிதிநிறுவனம் பெயரில் பல நூறு கோடி ரூபாய் மோசடி நடந்ததாக புகார் எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து புகார் பெற காவல்துறையினர் ஆர்வம் காட்டவில்லை எனவும், புகாருக்கு உள்ளானவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம் உள்ளிட்டவை வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது. 

இந்தநிலையில், தற்போது காவல் என எழுதப்பட்ட வாகனத்தில் ஆசிரியர் ஒருவர் கடத்தப்பட்டதாக எழுந்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com