வ.உ.சி பூங்கா: நேதாஜி காய்கறி மார்க்கெட் செயல்படத் தொடங்கியது; கூடுதல் நேரம் ஒதுக்க கோரி வியாபாரிகள் திரண்டதால்  பரபரப்பு

நேதாஜி காய்கறி மார்க்கெட் வ.உ.சி பூங்கா பகுதியில் செயல்படத் தொடங்கியது.
வ.உ.சி பூங்கா பகுதியில் செயல்படத் தொடங்கிய நேதாஜி காய்கறி மார்க்கெட்
வ.உ.சி பூங்கா பகுதியில் செயல்படத் தொடங்கிய நேதாஜி காய்கறி மார்க்கெட்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கரோனாவை  கட்டுப்படுத்தும் வகையில் ஈரோடு ஆர்.கே.வி. ரோட்டில் செயல்பட்டு வந்த நேதாஜி காய்கறி மார்க்கெட் கடந்த மார்ச் மாதம் 29 -ஆம் தேதி முதல் ஈரோடு பஸ் நிலையத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வந்தது.  இங்கு  இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை மொத்த வியாபாரமும், காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை சில்லறை வியாபாரம் நடைபெற்று வந்தது.  

இந்நிலையில் பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டதால் மாற்று இடமாக ஈரோடு வ.உ.சி பூங்கா பகுதியில் ரூ.1 கோடி மதிப்பில் 700 கடைகள் கட்டப்பட்டு வந்தது.  இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்தது.  தற்போது ஈரோடு மாவட்டத்தில் இரண்டாவது கட்டமாக கரோனா தாக்கம் அதிகமாக பரவி வருவதால் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் தற்காலிகமாக சில்லரை வியாபாரத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது, மொத்த வியாபாரம் மட்டும் நடந்து வந்தது.

இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை முதலே ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்த பொருள்களை வியாபாரிகள் காலிசெய்து வ.உ.சி பூங்கா பகுதியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளில் பொருள்களை வைத்து பூஜை செய்தனர். புதிதாக அமைக்கப்பட்டுள்ள மார்க்கெட்டில் 700 க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் பழக்கடைகள்        உள்ளன.  ஏற்கனவே மார்க்கெட் வியாபாரிகளுக்கு குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழை இரவு முதல் சனிக்கிழமை காலை வரை மொத்த வியாபாரம் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் வந்திருந்த நூற்றுக்கணக்கான வியாபாரிகள் காய்கறி வாங்கி சென்றனர்.

நாளை ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் என்பதால் பொதுமக்களும் அதிகளவு வந்திருந்து மொத்த விலையில்  காய்கறிகளை வாங்கி சென்றனர். சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் வியாபாரிகள் உள்ளே நுழையும் போது கைகளில் கிருமி நாசினி அவருக்கு தெளிக்கப்பட்டது. வியாபாரிகள் வாகனம் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டது வாகனத்திலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.  டவுன் டிஎஸ்பி ராஜூ தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் அவர்கள் ஒலிபெருக்கி மூலம் அரசு வலியுறுத்திய பாதுகாப்பு வழிமுறைகளை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறி வந்தனர்.

மேலும் காலை 7 மணிக்குள் வியாபாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினர்.  காய்கறிகளை வாங்க வரும் சரக்கு வாகனங்கள் பவானி ரோடு வழியாக உள்ளே அனுமதிக்கப்பட்டன.  சில மக்கள் முகக் கவசம் இல்லாமல் வந்தவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.  

இந்நிலையில் ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று இரவு பலத்த மழை பெய்ததால் மார்க்கெட் பகுதியில் சேரும் சகதியுமாக காணப்பட்டது.  இதனால் வியாபாரிகள் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு உள்ளே சென்று வந்தனர் மேலும் லோடு ஏற்றி வந்த சரக்கு வாகனங்கள் ஆங்காங்கே சகதியில் சிக்கியது.  

இந்நிலையில் இன்று காலை 7.30 மணி அளவில் நுழைவாயில் பூட்டப்பட்டது. இதையடுத்து தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஒன்று திரண்டு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம் சென்று முறையிட்டனர்.  

அப்போது வியாபாரிகள் கூறும்போது,  நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் நாங்கள் ஏற்கனவே நிறைய சரக்குகள் வைத்துள்ளதால் எங்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி தரவேண்டும் இல்லையென்றால் பொருள்கள் கெட்டு விடும் என்றனர்.

மேலும் நேற்று பெய்த மழையால் மார்க்கெட் பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் எங்களுக்கு சிரமமாக உள்ளது இதை சரி செய்ய வேண்டும் கழிப்பறை வசதியும் சரியாக இல்லை அதையும் சரி செய்து கொடுக்க வேண்டும் என்று முறையிட்டனர்.  இதுகுறித்து காவலர்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் எடுத்துக் கூறினர்.  

இதைத் தொடர்ந்து சனிக்கிழமை ஒரு நாள் காலை 9 மணி வரை வியாபாரம் செய்து கொள்ள நேரம் நீட்டித்து அனுமதி அளிக்கப்பட்டது.  அதைத்தொடர்ந்து வியாபாரிகள் திரும்பி சென்றனர்.  இதனால் மார்க்கெட் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.  மேலும் சில வியாபாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதயில் பொருள்களை வைக்காமல் வெளிப்புறமாக வைத்திருந்தனர் இதனை மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com