சேலம்-சென்னை விமான சேவை வாரம் இருமுறையாக தற்காலிக மாற்றம்

சேலம் - சென்னை விமான சேவை தினசரி நடைபெற்று வந்த நிலையில், வாரத்திற்கு இரண்டு நாள்கள் மட்டுமான சேவையாக தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சேலம்-சென்னை விமான சேவை வாரம் இருமுறை சேவையாக தற்காலிக மாற்றம்
சேலம்-சென்னை விமான சேவை வாரம் இருமுறை சேவையாக தற்காலிக மாற்றம்

சேலம் - சென்னை விமான சேவை தினசரி நடைபெற்று வந்த நிலையில், வாரத்திற்கு இரண்டு நாள்கள் மட்டுமான சேவையாக தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சேலத்தில் இருந்து சென்னைக்கு நாள்தோறும் பயணிகள் விமானம் ட்ரூஜெட் விமான நிறுவனம் சார்பில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கரோனா ஊரடங்கு காலத்தில் விமான சேவை நிறுத்தப்பட்டிருந்தது.

பொது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து கடந்த மே 27-ந்தேதி முதல் பயணிகள் விமான சேவை மீண்டும் தொடங்கியது. அப்போது விமான புறப்பாட்டு நேரம் மாற்றப்பட்டு காலை 7.25 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு 8.25 மணிக்கு சேலம் வந்தடையவும், மீண்டும் 8.55 மணிக்கு புறப்பட்டு 9.55 மணிக்கு சென்னையை சென்றடையும் வகையில் பயண நேரம் மாற்றப்பட்டது.

இந்த நிலையில் கடந்த ஜூலை 2-வது வாரத்தில், ஒரு வாரத்திற்கு சேலம்-சென்னை விமான சேவை நிர்வாக காரணங்களுக்காக நிறுத்தப்பட்டிருந்தது. ஜூலை 20-ந்தேதி முதல் விமான சேவை தொடங்கப்பட்ட நிலையில், விமான புறப்பாட்டு நேரம் மாற்றப்பட்டது. நண்பகல் 11.45 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு 12.45 மணிக்கு சேலம் வந்தடையவும், மீண்டும் மதியம் 1.05 மணிக்கு புறப்பட்டு 2.05-க்கு சென்னை சென்றடையும் வகையில் சேலம்-சென்னை பயணிகள் விமான சேவை நேரம் மாற்றியமைக்கப்பட்டது.

இந்நிலையில், நிர்வாகக் காரணங்களுக்காக, சேலம்-சென்னை பயணிகள் விமான சேவை, வாரம் இருமுறை சேவையாக திங்கள்கிழமை முதல் மாற்றப்பட்டிருப்பதாக, ட்ரூஜெட் நிறுவன மேலாளர் பிரசன்னா தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறியது:

சேலம் - சென்னை பயணிகள் விமான சேவை, வரும் ஆகஸ்ட் 15-ந்தேதி வரை, வாரத்தில் திங்கள்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் மட்டும் இருக்கும். நிர்வாக காரணங்களின் அடிப்படையில் இந்த மாற்றம் தற்காலிகமாக செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் தினசரி பயணிகள் சேவையாக மாற்றப்படும். கரோனாத் தொற்று ஏற்படுவதை முற்றிலும் தடுக்கும் வகையில், ட்ரூஜெட் நிறுவனத்தின் சார்பில் பயணிகளுக்கு முழு கவச உடை, முகத் தடுப்பான், முகக் கவசம், சானிடைசர் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், சென்னையில் இருந்து சேலத்திற்கு விமானம் வந்திறங்கியவுடன் முழுமையாக கிருமிநாசினி தூய்மைப்படுத்தப்பட்டு பின்னர் சேலத்தில் இருந்து சென்னைக்கு விமானம் இயக்கப்படுகிறது.

கரோனாத் தொற்று கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் வழக்கமான தினசரி சேவையுடன், கூடுதல் விமானங்களும் இயக்கப்பட வாய்ப்புள்ளது. வழக்கமாக வரும் பயணிகளுடன் தற்போது புதியதாக நிறைய பேர் விமானப் பயணத்தை தேர்ந்தெடுத்து வருகின்றனர் என்றார் அவர்.

திங்கள்கிழமை சென்னையில் இருந்து சேலத்திற்கு 35 பயணிகள் வந்தனர். சேலத்தில் இருந்து சென்னைக்கு 62 பயணிகள் புறப்பட்டுச் சென்றனர். பயணிகள் வருகையையொட்டி, விமான நிலைய நிர்வாகம் சார்பில் முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பயணிகள் வரும் பாதை, அமரும் இடம், காத்திருப்பு அறை, பொருட்கள் சோதனையிடும் இடம் மற்றும் கழிவறை உள்ளிட்ட அனைத்து இடங்களும் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com