முகப்பு தற்போதைய செய்திகள்
பொது முடக்க விதிமீறல்: தனியார் நிதி நிறுவன அலுவலகத்திற்கு சீல்
By DIN | Published On : 29th July 2020 12:00 PM | Last Updated : 29th July 2020 12:00 PM | அ+அ அ- |

திருச்சி மன்னார்புரத்தில் பொதுமுடக்க விதிமீறலில் ஈடுப்பட்ட தனியார் நிதி நிறுவன அலுவலகத்திற்கு மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
திருச்சி மன்னார்புரத்தில் தனியாருக்குச் சொந்தமான நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த நிறுவனத்தில் பணம் டெபாசிட் செய்வதில் முறைகேடு நடந்ததாக பல்வேறு புகார்கள் இருந்து வருகிறது. இதுகுறித்து மாநகர குற்றப்பிரிவு காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணி காரணமாக பொது முடக்கம் அமலில் உள்ளது. ஆனால் இந்த தனியார் நிதி நிறுவனத்தில் இன்று காலை 200க்கும் மேற்பட்டோர் குவிந்து சமூக இடைவெளியை கேள்விக்குறி ஆக்கியதாக கூறப்படுகிறது.
இதை அறிந்த மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் கிழக்கு வட்டாட்சியர் மோகன் தலைமையில் தனியார் நிறுவனத்திற்கு விரைந்து சென்று அங்கிருந்தவர்களை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து பொதுமுடக்க விதிமீறலில் ஈடுப்பட்டதாக அந்த அலுவலகத்தின் முக்கிய அறை மற்றும் வெளிக் கதவைப் பூட்டி சீல் வைத்தனர். இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றத்தை தவிர்க்க கன்டோன்மென்ட் காவல் உதவி ஆணையர் மணிகண்டன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.