திருச்சுழி பூமிநாத சுவாமி கோவில் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 29th July 2020 09:13 AM | Last Updated : 29th July 2020 09:13 AM | அ+அ அ- |

திருச்சுழியில் பயணிகள் நிழற்குடை இல்லாத அருள்மிகு பூமிநாத சுவாமி கோயில் பேருந்து நிறுத்தம் .
அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் திருச்சுழியிலுள்ள அருள்மிகு பூமி நாத சுவாமி கோவில் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க பக்தர்களிடயே கோரிக்கை எழுந்துள்ளது.
திருச்சுழி அருள்மிகு பூமிநாத சுவாமி கோவிலானது பழமையான கோவில்களில் ஒன்றானதாகும். ராமேசுவரம் செல்ல இயலாதவர்கள் இங்குள்ள குண்டாற்றில் முன்னோர்க்கான திதி அர்ப்பணம் எனும் சமயச் சடங்குகளைச் செய்வது, பின்னர் பூ மிநாத சுவாமி கோவிலில சொர்க்க தீபம் இட்டு இறந்தோருக்கான சிறப்பு வழிபாடுகள் செய்வது உள்ளிட்ட பாரம்பரியச் சடங்குகளை இப்பகுதியினர் மட்டுமல்லாது சுற்று வட்ட மாவட்டங்களைச் சேர்ந்தோரும் செய்வது வாடிக்கையாகும். இதனால் ஆண்டு முழுவதுமே இக்கோவிலுக்கு வெளியூர் பக்தர்கள் அதிகம் வருவதுண்டு. ஆனால் இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் மீண்டும் தங்கள் ஊருக்குச் செல்ல பேருந்தைப் பிடிக்கக் காத்திருக்க வேண்டுமானால் அங்கு நிழற்குடை வசதி இல்லை. இதனால் வெயிலானாலும், மழையானாலும் ஒதுங்க இடமின்றி பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
இச்சூழலால் இங்கு பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டுமெனப் பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்தும் தற்போது வரை நடவடிக்கை இல்லையெனப் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஆகவே உரிய நடவடிக்கை மூலம் விரைவில் இப் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டுமென பக்தர்கள் சார்பில் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.