போடியில் மின்னணு ஏல வர்த்தகத்திற்கு ஏலக்காய் வரத்து குறைவு

போடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மின்னணு ஏல வர்த்தகத்தில் ஏலக்காய் வரத்து குறைந்தது.
போடியில் மின்னணு ஏல வர்த்தகத்திற்கு ஏலக்காய் வரத்து குறைவு


போடி: போடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மின்னணு ஏல வர்த்தகத்தில் ஏலக்காய் வரத்து குறைந்தது.

தமிழகத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் கேரள பகுதியில் ஏலத் தோட்டம் வைத்து விவசாயம் செய்து வருகின்றனர். 

இந்நிலையில் ஏலக்காய் ஏலம் நடத்த வியாபாரிகள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் தேனி மாவட்டம் போடியில் உள்ள நறுமணப் பொருள்கள் நல வாரியத்தில் உள்ள மின்னணு ஏல மையம் மற்றும் புத்தடியில் உள்ள ஏல மையம் ஆகியவற்றில் ஏலக்காய் ஏலம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

இதனையடுத்து ஜூன் 3 ஆம் தேதி போடியில் 75 நாட்களுக்கு பின் முதல் ஏலம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து புத்தடியில் ஜூன் 4 ஆம் தேதி ஏலம் நடைபெற்றது. தொடர்ந்து போடியில் வெள்ளிக்கிழமை ஏலக்காய் மின்னணு ஏல முறையில் வர்த்தகம் நடைபெற்றது. இதில் 9125 கிலோ பதிவு செய்யப்பட்டது. அதிகபட்ச விலையாக ரூ.2210-க்கும், சராசரி விலையாக ரூ.1780.43-க்கும் விற்பனையானது.

வழக்கமாக ஏலக்காய் ஏல மையங்களில் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் கிலோ வரை ஏலக்காய் பதிவு செய்து வர்த்தகம் நடைபெறுவது வழக்கம். கடந்த 75 நாட்களாக பொது முடக்கு காரணமாக ஏலக்காய் விவசாயிகள் தங்களது தோட்டங்களுக்கு சென்று மகசூலை கொண்டுவர முடியவில்லை. இதனால் ஜூன் 3 ஆம் தேதி 18 ஆயிரத்து 956 கிலோ ஏலக்காய் பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது 9 ஆயிரத்து 125 கிலோ ஏலக்காய்தான் பதிவானது. இது ஏலக்காய் வர்த்தகத்தில் மிகக் குறைந்த பதிவாகும்.

அடுத்தடுத்த நாட்களில் மின்னணு ஏல வர்த்தகத்திற்கு பதிவு செய்யும் ஏலக்காயின் அளவு இன்னும் குறையவும், இதே நிலை தொடர்ந்தால் மின்னணு ஏலம் நிறுத்தி வைக்கவும் வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com