மனதில் படுவதை யார் முன்னிலையிலும் அஞ்சாமல் பேசியவர் அன்பழகன்

சென்னை மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர், சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் மனதில் படுவதை யார் முன்னிலையிலும் அஞ்சாமல் துணிச்சலாக பேசுபவர். 
மனதில் படுவதை யார் முன்னிலையிலும் அஞ்சாமல் பேசியவர் அன்பழகன்

சென்னை: திராவிட இயக்கத்தின் தீரர் பழக்கடை ஜெயராமனின் செல்ல மகன், தலைவர் கருணாநிதியின் அன்பையும் ஆதரவையும் அளவின்றிப் பெற்ற உடன்பிறப்பு, பாசத்திற்குரிய சகோதரர், பம்பரமாய்ச் சுழன்று பணியாற்றிய ஆற்றல்மிகு தளகர்த்தர், சென்னை மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர், சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் மனதில் படுவதை யார் முன்னிலையிலும் அஞ்சாமல் துணிச்சலாக பேசுபவர். 

சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ-வுமான ஜெ.அன்பழகன், கட்சி தொண்டனுக்கு ஒன்று என்றால் முதல் ஆளாக நின்றவர் ஜெ.அன்பழகன்.

ஜெ.அன்பழகனின் தந்தை பழக்கடை ஜெயராமன் விழுப்புரம் மாவட்டம் காணை அருகே உள்ள வெங்கமூர் கிராமம் தான் சொந்த ஊர். ஜெயராமன் இளம் வயதிலேயே சென்னைக்கு குடிபெயர்ந்து தியாகராயர் நகரில் பழக்கடை தொடங்கினார். திமுகவில் பகுதிச்செயலாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்த ஜெயராமன்,  தனது இரண்டு மகன்களுக்கும் அன்பழகன், கருணாநிதி என பெயர் சூட்டினார். கடின உழைப்பால் உயர்ந்த  தந்தையின் அடியொற்றி கட்சிப் பணிகளில் ஈடுபடத் தொடங்கிய ஜெ.அன்பழகன், திமுகவுக்காக நேரம் காலம் பார்க்காமல் கடுமையாக உழைத்தவர். 

கருணாநிதி மீது பக்தி கொண்ட ஜெ. அன்பழகன், கருணாநிதியின் எண்ண ஓட்டங்களை அறிந்து அதற்கேற்றார் போல் செயல் புரிந்தவர். 

தலைநகர் சென்னையில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக அரசியல் செய்து வந்த அன்பழகன், மனதில் பட்டதை எதற்காகவும், யாருக்காகவும் மறைக்காமல் வெளிப்படையாகவும், துணிச்சலாகவும் பேசுபவர். இதனால் அவர் பல இன்னல்களை எதிர்கொண்டதுண்டு. பொதுக்குழு, செயற்குழு, மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், பொதுக்கூட்டம், சட்டப்பேரவை கூட்டம் என எந்த இடமாக இருந்தாலும் அன்பழகன் பேச எழுந்தாலே அதிரடியாக தான் இருக்கும்.  

அதேபோல் தொண்டனுக்கு ஒன்று என்றால் முதல் ஆளாக முன்னுக்கு நின்று உதவி செய்தவர். கால் நூற்றாண்டுக்கும் மேலாக தலைநகர் சென்னையில் அரசியல் செய்வது அவ்வளவு எளிதல்ல என்பது அனைவரும் அறிந்தது. தனது அபிமானிகளின் துணையை கொண்டு தன் வாழ்நாளின் இறுதிமூச்சு வரை வெற்றிக்கரமாக அரசியல் செய்து மறைந்துள்ளார் அன்பழகன். 

பழக்கடை அன்பழகன் அரசியலில் மட்டுமல்லாமல் திரைப்படத் துறையில் திரைப்படத் தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் இருந்து வந்தவர். 

வசதி வாய்ப்புகள் பெருகினாலும் தனது தந்தை ஆரம்பக் காலத்தில் தி.நகரில் தொடங்கிய பழக்கடையை தொடர்ந்து நடத்தி வந்த அன்பழகன், அதனை தற்போது அன்பழகனின் மகன் ராஜா கவனித்து வருகிறார். 

திமுகவில் செல்வாக்கு மிக்க மனிதராக இருந்து வந்த அன்பழகன், தனது மகன் ராஜாவுக்கு கட்சியில் எந்தப் பதவியும், பொறுப்பையும் பெற்று தந்ததில்லை. 

கட்சி நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்துகொள்ளும் அன்பழகன்,  தொகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதிலும் முன்னோடியாக வலம் வந்தவர்.  சேப்பாக்கம், திருவல்லிக்கேணி பகுதியில் தொடர்ந்து  நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்தவர், ஏற்கனவே பாதிக்கப்பட்ட தனது உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் கரோனா நோய்த் தொற்றிலிருந்து தமிழக மக்களைப் பாதுகாக்க, திமுக முன்னெடுத்த செயல்திட்டங்களைச் சிறப்புடன் நிறைவேற்றுவதற்காக சிறிதும் ஓய்வின்றி களப்பணியாற்றியதின் காரணமாக நோய்த்தொற்று ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி இன்று மறைவெய்தினார்.  

இவரது மறைவு திமுகவுக்கு பேரிழப்பாகவே கருதுகின்றனர் அக்கட்சியின் தொண்டர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com