திருப்பூரிலிருந்து 10 மருத்துவக் குழுக்கள் காஞ்சிபுரம் வருகை: ஆட்சியர் தகவல்

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பதால் திருப்பூரிலிருந்து 10 மருத்துவக் குழுக்கள் காஞ்சிபுரம் வந்திருப்பதாக மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா புதன்கிழமை தெரிவித்தார
திருப்பூரிலிருந்து 10 மருத்துவக் குழுக்கள் காஞ்சிபுரம் வருகை: ஆட்சியர் தகவல்

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பதால் திருப்பூரிலிருந்து 10 மருத்துவக் குழுக்கள் காஞ்சிபுரம் வந்திருப்பதாக மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா புதன்கிழமை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: 

காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை வரை கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 751 ஆகவும், 427 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர். தற்போது 317 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 127 பேர் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையிலும்,பிறர் சென்னையில் உள்ள மருத்துவமனைகளிலும் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். 

காஞ்சிபுரம் நகரில் ஒவ்வொரு 5 வார்டுகளாகவும்,ஒவ்வொரு கிராமத்திலும் இரு வார்டுகள் வீதமாகவும் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.மாவட்டம் முழுவதும் ஒருவர் விடாமல் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

காஞ்சிபுரத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருப்பதால் மருத்துவத்துறையினருக்கு உதவியாக திருப்பூரிலிருந்து 10 மருத்துவக் குழுக்கள் காஞ்சிபுரம் வந்துள்ளன. இக்குழுக்களும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது. காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கு செல்ல முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 662 தொழிற்சாலைகள் மீண்டும் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 

காஞ்சிபுரத்தில் ஞாயிறு, புதன் ஆகிய இரு நாட்கள் மட்டுமே இறைச்சிக்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும். உணவகங்கள் காலை 6 மணி முதல் 8 மணி வரை பார்சல்களை மட்டும் விநியோகம் செய்யவும், நகைக் கடைகள், ஜவுளிக்கடைகள் ஆகியன காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டும் செயல்படும். இதற்கு  வியாபாரிகள் சங்கத்தினரும் ஒத்துழைப்பு தருவதாக தெரிவித்துள்ளனர். பொதுமுடக்கம் முழுவதுமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் 36 நடமாடும் காய்கறிக்கடைகள், 13 மளிகைக்கடைகள், 8 பால் வண்டிகள் ஆகியன மூலம் மக்கள் பொருள் களை வாங்கிக் கொள்ளலாம் எனவும் ஆட்சியர் தெரிவித்தார்.

பேட்டியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம்,எஸ்.பி.பா.சாமுண்டீஸ்வரி, சார் ஆட்சியர் எஸ்.சரவணன், ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ ஆகியோரும் உடன் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com