சென்னையில் இருந்து வாழப்பாடி பகுதிக்கு வந்த 11 மாத குழந்தை, கர்ப்பிணி உள்பட 6 பேருக்கு கரோனா

சென்னையில் இருந்து வாழப்பாடிக்கு திரும்பியவர்களில் 11 மாத குழந்தை,  இரு சிறுவர்கள், கர்ப்பிணி உள்பட 6 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதியானது.
சென்னையில் இருந்து வாழப்பாடி பகுதிக்கு வந்த 11 மாத குழந்தை, கர்ப்பிணி உள்பட 6 பேருக்கு கரோனா

சென்னையில் இருந்து வாழப்பாடிக்கு திரும்பியவர்களில் 11 மாத குழந்தை,  இரு சிறுவர்கள், கர்ப்பிணி உள்பட 6 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதியானது. இவர்களுடன் வந்தவர்கள், வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள சுகாதாரத்துறை வாயிலாக அறிவுறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி வருவோருக்கு, சேலம் மாவட்ட எல்லையான தலைவாசல் நத்தக்கரை சுங்கச்சாவடியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமில், சளி மாதிரி எடுத்து கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

செவ்வாயக்கிழமை சென்னையில் இருந்து வாழப்பாடிக்கு திரும்பிய 32 வயது பெண் ஒருவருக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதியானது. இவர் ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவரது மகன்களான 8 வயது சிறுவன் மற்றும் 11 மாத ஆண் குழந்தை இருவருக்கும், வாழப்பாடி சுகாதாரத்துறையினர் புதன்கிழமை எடுத்த சளி பரிசோதனையில், வியாழக்கிழமை தொற்று உறுதியானது. இதனையடுத்து, குழந்தைகள் இருவரும் ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சென்னையில் இருந்து வாழப்பாடி அடுத்த திருமனுார் பகுதிக்கு திரும்பிய 15 வயது சிறுவன்  மற்றும் 41 வயது ஆண் ஆகிய இருவருக்கும் திருமனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், புதன்கிழமை எடுக்கப்பட்ட  சளி மாதிரியை பரிசோதனை செய்ததில், வியாழக்கிழமை தொற்று உறுதியானது.

இதே போன்று, சென்னையில் இருந்து பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த ஆரியபாளையம் கிராமத்திற்கு உறவினர் வீட்டிற்கு துக்கம் விசாரிக்க வந்த, 28 வயது கர்ப்பிணி பெண்ணுக்கும், கல்வராயன்மலை கருமந்துறை அடுத்த சேர்வாய்ப்பட்டு கிராமத்தை சேர்ந்த 66 வயது பெண் ஒருவருக்கும் வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதியானது.

கரோனா தொற்று உறுதியான 11 மாத  குழந்தை, இரு சிறுவர்கள் மற்றும் 41 வயது ஆண் ஆகிய 4 பேரும், ஆத்துார் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு சிகிச்சை பிரிவுக்கும், கருமந்துறையைச் சேர்ந்த 66 வயது பெண்ணும், ஆரியபாளையத்தை சேர்ந்த 28 வயது கர்ப்பிணியும் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

கரோனா தொற்று உறுதியானவர்களோடு சென்னையில் இருந்து வந்த குடும்பத்தினர் உறவினர்களுக்கு, பரிசோதனையில் கரோனா தொற்று உறுதியான நிலையில், 14 நாள்கள் வரை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தியுள்ள சுகாதாரத்துறையினர், தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com