மீண்டும் சரிவை சந்திக்கும் கோழிப்பண்ணை தொழில்! - 10 கோடி முட்டைகள் தேக்கம்

கரோனா தொற்று பரவலால் கோழிப்பண்ணை தொழில் மீண்டும் சரிவை சந்தித்து வருகிறது. பொது முடக்கம், பள்ளிகள் திறக்காதது, ஏற்றுமதி பாதிப்பு உள்ளிட்டவற்றால் நாமக்கல் மண்டலத்தில் சுமார் 10 கோடி முட்டைகள் தேக்கம் அ
நாமக்கல் மண்டலத்தில் தேக்கம் அடைந்துள்ளசுமார் 10 கோடி முட்டைகள்
நாமக்கல் மண்டலத்தில் தேக்கம் அடைந்துள்ளசுமார் 10 கோடி முட்டைகள்

நாமக்கல்: கரோனா தொற்று பரவலால் கோழிப்பண்ணை தொழில் மீண்டும் சரிவை சந்தித்து வருகிறது. பொது முடக்கம், பள்ளிகள் திறக்காதது, ஏற்றுமதி பாதிப்பு உள்ளிட்டவற்றால் நாமக்கல் மண்டலத்தில் சுமார் 10 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன.

இந்தியாவில் 23 மண்டலங்களை உள்ளடக்கி கோழிப்பண்ணை தொழில் நடைபெறுகிறது. இதில் தமிழகம், கேரளம் இரு மாநிலங்களுக்கு முட்டை விநியோகத்தில் முதன்மையாக விளங்குவது நாமக்கல் மண்டலம். இம்மண்டலத்தில் உள்ள 1100 கோழிப் பண்ணைகளில் நாள்தோறும் சுமார் 4 கோடி முட்டைகள் உற்பத்தியாகி வருகின்றன.

கரோனா பொது முடக்கத்தால்  மார்ச்,  ஏப்ரல் மாதம்  முட்டை விற்பனை மிகவும் பாதிப்படைந்தது. தமிழக அரசுடன் இணைந்து கோழிப் பண்ணையாளர்கள் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு முட்டை விற்பனையை அதிகரிக்கச் செய்தனர். இதனால் ஒரு ரூபாய் வரையில் விற்பனையான முட்டை ரூ.4 வரையில் உயர்வடைந்தது. இதனால் பண்ணைகளில் தேங்கியிருந்த சுமார் 20 கோடி முட்டைகள் குளிர்பதன கிடங்குகளிலிருந்து விற்பனைக்கு அனுப்பப்பட்டன. பண்ணைகளில் குஞ்சு விடுவதும் குறைக்கப்பட்டதால் உற்பத்திக்கு ஏற்ப முட்டைகள் விற்பனையாகி வந்தது. இதற்கிடையே தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் முட்டை விற்பனை மேலும் அதிகரிக்க தொடங்கியது. நாமக்கல் மண்டலத்தில் இருந்து கேரளம் கர்நாடகம் மற்றும் வட மாநிலங்களுக்கு முட்டைகள் ஏராளமாக அனுப்பப்பட்டன.

இந்த நிலையில் தமிழகத்தில் கரோனா காற்றின் வேகம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இதில் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் கரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு ஜூன் 30 வரை பொதுமுடக்கம் அமலில் உள்ளது. பிற மாவட்டங்களிலும் இதன் தாக்கம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதால் முட்டை விற்பனை கடந்த ஒரு வாரமாக வெகுவாக சரிந்துள்ளது. முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.4.60 இருந்த நிலையில் ஒரே வாரத்தில் 90 காசுகள் குறைந்து ரூ. 3.70-ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. 

நாமக்கல் மண்டலத்தில் தேக்கம் அடைந்துள்ளசுமார் 10 கோடி முட்டைகள்

தற்போதைய சூழலில் பல மாவட்டங்களில் கடைகள் திறப்பு நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் முட்டை விற்பனையும் சரிவடைந்து வருகிறது. ஜூன் மாதம் திறக்க வேண்டிய அரசு பள்ளிகளும் திறக்கப்படாததால் கடந்த மூன்று வாரத்தில் தினசரி ஐம்பது லட்சம் முட்டைகள் சத்துணவுக்கு அனுப்பப்பட வேண்டிய நிலையில் அனுப்ப முடியாத சூழல் உள்ளதால் 7.50 கோடி முட்டைகள் பண்ணைகளில் தேக்கமடைந்துள்ளன. 

சென்னை உள்பட நான்கு மாவட்டங்களுக்கு சுமார் 70 லட்சம் முட்டைகள் அனுப்பப்பட்ட நிலையில் தற்போது 15 முதல் 20 லட்சம் முட்டைகளே செல்கின்றன. இதன் மூலம் மூன்று கோடி முட்டைகள் வரை தேங்கியுள்ளன. மேலும் வளைகுடா நாடுகளுக்கும், ஆப்பிரிக்க நாடுகளுக்கும், ஓமன் நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வந்த ஒன்றரை கோடி முட்டைகளில் தற்போது 80 லட்சம் முட்டைகள் மட்டுமே ஏற்றுமதியாகி வருகின்றன. இவ்வாறு பல வகைகளில் 10 முதல் 12 கோடி முட்டைகள் பண்ணைகளிலும்,  குளிர்பதனக் கிடங்குகளிலும் விற்பனைக்கு அனுப்ப முடியாமல் தேங்கி கிடப்பதால் பண்ணையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு முட்டை கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளன துணைத் தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது: கோழி பண்ணை தொழில் மிகவும் மோசமான நிலையில் இருப்பது அனைவரும் அறிந்ததே. கரோனா தொற்று பரவலுக்கு பின் மாறி மாறி இத்தொழிலில் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். 

பள்ளிகள் திறக்காதது, குறிப்பிட்ட சில மாவட்டங்களில் பொது முடக்கம் அமலில் உள்ளது, மக்களிடம் வருவாய் இழப்பு, ஏற்றுமதியில் ஏற்பட்ட பாதிப்பு, உணவகங்கள் முழுமையாக செயல்படாதது போன்றவற்றால் நாமக்கல் மண்டல பண்ணைகளில் 12 கோடி முட்டைகள் தேங்கியுள்ளன. கடந்த மூன்று மாதத்தில் ஓரிரு வாரங்கள் மட்டுமே இத்தொழிலில் பண்ணையாளர்கள் வருவாயை ஈட்ட முடிந்தது. உற்பத்தி செலவுக்கு ஏற்ப லாபம் கிடைக்கவில்லை. 
மத்திய அரசு கோழிப் பண்ணை தொழிலுக்கு வங்கிகள் மூலம் வழங்குவதாக அறிவித்த கடன் தொகையை முழுமையாக வழங்கவில்லை. வங்கி அதிகாரிகளும் அது தொடர்பான தகவல்களை தர மறுக்கின்றனர். மிகவும் மோசமான சூழலில் உள்ள கோழி பண்ணை தொழில் மத்திய,  மாநில அரசுகள் பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மீன்பிடி தடைக்காலங்களில் எவ்வாறு நிவாரணம் வழங்கப்படுகிறதோ, அதேபோல் கோழிப்பண்ணைத் தொழில் பாதிப்புக்குள்ளாகும் போது நிவாரண உதவிகளை அரசு வழங்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com