கரோனாவை எதிர்கொள்வதில் உலக நாடுகளிடையே ஒத்துழைப்பு இல்லை: ஐ.நா. குற்றச்சாட்டு

கரோனா அபாயத்தை எதிர்கொள்வதில், உலக நாடுகளிடையே ஒத்துழைப்பு இல்லை. இதன் காரணமாக, நிலவரம் கைமீறிப் போய்க் கொண்டிருக்கிறது.
கரோனாவை எதிர்கொள்வதில் உலக நாடுகளிடையே ஒத்துழைப்பு இல்லை: ஐ.நா. குற்றச்சாட்டு


நியூயார்க்: கரோனா நோய்த்தொற்று (கொவைட்}19) அபாயத்தை எதிர்கொள்வதில் உலக நாடுகளிடையே ஒத்துழைப்பு இல்லை என்று ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து "தி அசேசியேட்டட் பிரஸ்' செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் தெரிவித்துள்ளதாவது:
கரோனா நோய்த்தொற்று சீனாவில்தான் முதல் முறையாகத் தோன்றியது. அதற்குப் பிறகு ஐரோப்பிய நாடுகளை அடைந்த அந்த நோய்த்தொற்று பிறகு தெற்கு அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியாவில் வேகமாகபக் பரவி வருகிறது.

இந்த நிலையில், கரோனா பரவலின் இரண்டாவது அலை எழும் என்றும் சில நிபுணர்கள் கூறி வருகின்றனர். எனினும், இந்த அபாயத்தை எதிர்கொள்வதில், உலக நாடுகள் அனைத்தும் தனித்தனியாக செயல்படுகின்றன. அந்த நடவடிக்கையில் நாடுகளிடையே ஒத்துழைப்பு இல்லை.

இதன் காரணமாக, கரோனா நிலவரம் கைமீறிப் போய்க் கொண்டிருக்கிறது. கரோனா நோய்த்தொற்று பரவலுக்கு எதிரான போராட்டத்தில் உலக நாடுகள் தங்களிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்துவது மட்டுமன்றி, அவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதும் அவசியமாக உள்ளது.

அந்த நாடுகள், நோய்க்கு எதிராகப் போரிடும் தங்களது திறன்களை ஒன்றாகத் திரட்டிப் போராட வேண்டும். கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள அரசியல், பொருளாதார, சமூக இழப்புகளை ஈடுசெய்வதிலும் உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். கரோனா காரணமாக உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்கள் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர்.

மேலும், பல்வேறு நாடுகளில் வன்முறையும் மனித உரிமை மீறல்களும் அதிகரித்து வருகின்றன. கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்ட இந்த பாதிப்புகளைக் களையவும் உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். 

ஆனால், தற்போது இதுபோன்ற விவகாரங்களில் உலக நாடுகளிடையே துளியும் ஒத்துழைப்பு இல்லாதது வேதனை அளிக்கிறது. இருந்தாலும், புதிய தலைமுறையினர் எதிர்காலத்தில் இந்த நிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அன்டோனியோ குட்டெரெஸ்.

தனது பேட்டியில் அவர் எந்த நாட்டையும் குறிப்பிட்டு குற்றம் சாட்டவில்லை. எனினும், உலக சுகாதார அமைப்புக்கு அளித்து வந்த நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தியது, சமூக இடைவெளி, பொது முடக்கம் உள்ளிட்ட கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த நிபுணர்களின் அறிவுரையை பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சொனாரோ அலட்சியம் செய்தது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை மறைமுகமாகக் குறிப்பிட்டு அன்டோனியோ குட்டெரெஸ் குற்றம் சாட்டியதாகக் கருதப்படுகிறது.

புதன்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் சுமார் 94 லட்சம் பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அந்த நோய்க்கு 4.8 லட்சத்துக்கும் மேலானோர் பலியாகியுள்ளனர்.

கரோனா நிலவரம்: பாதிப்பு 93,88,612; பலி 4,80,497

அமெரிக்கா     24,25,424    - 1,23,500
பிரேஸில்           11,52,066    - 52,788
ரஷியா               6,06,881    - 8,513
இந்தியா            4,56,183    - 14,476
பிரிட்டன்           3,06,210    - 42,927
ஸ்பெயின்         2,93,832    - 28,325
பெரு                    2,60,810    - 8,404
சிலி                      2,50,767    - 4,505
இத்தாலி            2,38,833    - 34,675
ஈரான்                 2,12,501    - 9,996
பிற நாடுகள்   31,85,105    - 1,52,388

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com