சாத்தான்குளம் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் சாவு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சி  தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே. எஸ். அழகிரி பங்கேற்று அஞ்சலி செலுத்தினார்.  
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே. எஸ். அழகிரி பங்கேற்று அஞ்சலி செலுத்தினார்.  

சிதம்பரம்: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் சாவு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சி  தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கீரப்பாளையம் கடைவீதியில், லடாக் எல்லையில் உயிர் நீத்த 20 ராணுவ வீரர்களுக்கு தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே. எஸ். அழகிரி பங்கேற்று அஞ்சலி செலுத்தினார்.  கட்சி நிர்வாகிகள் ஆர்.திருமாவளவன், துரை.பாலசந்தர், பி.ராதாகிருஷ்ணன், எஸ்.பிரகாசம், எஸ்.பார்த்தீபன், கே.திருமலைராஜன், கே.சேகர், எம்.மணிவண்ணன், டாக்டர் அருண், கே.செழியன், ஏ.பழனிவேல், சி.சாம்பமூர்த்தி, சேரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியின் உத்தரவிற்கிணங்க இந்தியா முழுவதும் எல்லையில் உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. சீனர்களின் ஊடுருவலை இந்தியா மட்டுமல்ல உலக நாடுகளே தவறான செயல் என கூறுகிறது. சீனப் பொருள்களை நாம் புறக்கணிக்க வேண்டும். சீனர்களின் உற்பத்திப் பொருள்களை நாம் வாங்கக்கூடாது. பொறுப்பான எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினால் அவர்களை தேச துரோகி என முத்திரை குத்துகின்றனர்.  காங்கிரஸ் கட்சி கேட்க விரும்புவதெல்லாம் இரண்டு விஷயங்கள்தான். ராணுவ வீரர்கள் 20 பேர் இந்திய எல்லையில் உயிரிழந்தார்கள். அவர்கள் எந்த ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தனர் என்பது தெரியவில்லை. இந்தியர்களும் சீன எல்லையில் ஊடுருவவில்லை. சீனர்களும் இந்திய எல்லையில் ஊடுருவவில்லை என சொல்கிறார்கள்.  அப்படியானால் இராணுவ வீரர்கள் இறந்தது எப்படி என்ற கேள்வி எழுகிறது.

மன்மோகன்சிங் ஆட்சியின் போது 600 முறை சீன ஊடுருவல் இருந்ததாக தற்போது கூறுகிறார்கள். அப்போது 600 முறையும் சீன வீரர்கள் அடித்து துரத்தப்பட்டனர். ஒரு அங்குல நிலம் கூட விட்டுக் கொடுக்கப்படவில்லை. ஒரு உயிர் கூட போகவில்லை. ஆனால் தற்போது 2263 முறை சீன ஊடுருவல் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு இந்திய அரசு பதில் அளிக்க வேண்டும். 

இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் பிரதமர் மோடியை சீன அரசு புகழ்ந்து பேசுகிறது. சாத்தான்குளம் தந்தை, மகன் இறந்த சம்பவத்தை பொறுத்தவரை நடந்த விஷயங்கள் தவறானவை. இது கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தி உண்மைகளை வெளிக்கொண்டுவர வேண்டும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com