முகப்பு தற்போதைய செய்திகள்
ஈரோட்டில் பி.ஆர்.ஓ அலுவலக ஊழியருக்கு கரோனா
By DIN | Published On : 27th June 2020 11:51 AM | Last Updated : 27th June 2020 11:51 AM | அ+அ அ- |

ஈரோடு செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலகம்
ஈரோடு: ஈரோடு செய்தி மக்கள் தொடர்புத்துறை கீழ் இயங்கும் பெரியார் அண்ணா நினைவகத்தில் காவலாளியாக பணியாற்றி வந்த திண்டல் பகுதியைச் சேர்ந்த 35 மதிக்கத்தக்க ஆணுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கடந்த 22 ஆம் தேதி காய்ச்சல் ஏற்பட்டதால் பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் வெள்ளிக்கிழமை அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இவரது வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
திண்டல் பகுதியில் அவர் வசித்து வந்த வீடு மட்டும் அருகில் இருக்கும் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டது. மேலும் அந்த நபர் ஊதியம் தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகத்திற்கு செல்வார். அதேபோன்று கடந்த செவ்வாய்க்கிழமை அன்றும் அவர் சென்றுள்ளார்.
இதனைத்தொடர்ந்து செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனை முடிவில் ஊழியர்களுக்கு யாருக்கும் பாதிப்பு இல்லை என முடிவு வந்தது. மேலும் அந்த நபர் இரண்டு நாள்களுக்கு முன்பு நடந்த முதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்றார் என தகவல் பரவியது. ஆனால் அந்த நபர் முதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் மற்றும் அந்த தளத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அலுவலகம் மூடப்பட்டது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் பணியாற்றும் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை காலை கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.