கரோனா பொது முடக்கம்: முடங்கிய ராமேசுவரம்

கரோனா பொதுமுடக்கம் காரணமாக புனித ஸ்தலம் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் பூட்டப்பட்டுள்ளதால் வாழ்வாதாரத்தை இழந்த விடுதிகள், யாத்திரைபணியாளர்கள்,சங்கு வியாபாரிகள் என 50 ஆயிரம் பொதுமக்கள் முடங்கி உள்ளனர்.
ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் நிறைந்து நீராடும்  பகுதி பக்தர்கள் வெறிச்சோடி கானப்படுகிறது.
ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் நிறைந்து நீராடும் பகுதி பக்தர்கள் வெறிச்சோடி கானப்படுகிறது.


ராமேசுவரம்:  கரோனா பொதுமுடக்கம் காரணமாக புனிதத் தலமான ராமேசுவரம் அருள்மிகு ராமநாத சுவாமி கோவில் பூட்டப்பட்டுள்ளதால் கோவிலை மட்டுமே நம்பியிருக்கும் விடுதிகள், யாத்திரைப் பணியாளர்கள், சங்கு வியாபாரிகள் என 50 ஆயிரம் பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர்.

மீண்டும் கோவிலைத் திறக்க எப்போது உத்தரவு  பிறப்பிக்கப்படும் என ஏக்கத்துடன் அரசின் முடிவுக்காகக் காத்திருக்கின்றனர். 

ராமாயண காலத் தொடர்புடைய ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில், ஸ்ரீராமன் ஈசுவரனை வழிபட்டதால் ராமேசுவரம் என பெயர் பெற்றது.

இந்திய அளவில் 12 ஜோதி லிங்கங்களில் இதில் 11 ஜோதி லிங்கம் வட மாநிலங்களில் இருக்கின்றன. தென் மாநிலத்தில் உள்ள ஒரே ஜோதி லிங்கம் அமைந்துள்ள சிவன் ஆலயமாகும். யாத்திரை காசியில் தொடங்கி ராமேசுவரம் வந்து புனித நீராடி சிவனை வழிபட்டால் தான் நிறைபெருகிறது. முக்கிய ஸ்தலங்களில் துவாரகா, புரி, பத்திரிநாத் வட மாநிலங்களில் தென் மாநிலம் ராமேசுவரத்தில் ராமநாத சுவாமி கோவில் உள்ளது.  

ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் நிறைந்து நீராடும்  பகுதி பக்தர்கள் வெறிச்சோடி கானப்படுகிறது. 

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு மாதந்தோறும் 10 முதல் 12 லட்சம் என ஆண்டு தோறும் 1.30 கோடி பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்லுகின்றனர். இங்கு வரும் பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பின்னர் கோவிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்த கிணறுகளில் நீராடி வழிபாடு நடத்துகின்றனர். பக்தர்கள் கோவிலுக்குள்  புனித நீராடும் கிணறுகளில் அகில இந்திய யாத்திரைப் பணியாளர்கள்  சங்கம் சார்பில் 425 பணியாளர்கள் உள்ளனர். இதில் ஷிப்ட்வாரியாக 213, மறுநாள் 212 பேர் பக்தர்களுக்காகத் தீர்த்தக் கிணற்றில் இருந்து புனித நீரை ஊற்றுவது, அக்னி தீர்த்த கடலில் நீராடும் பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்வது, பக்தர்களுக்கு ராமநாதசுவாமி கோயில் வரலாற்று தெரிவித்து தரிசனத்திற்கு அழைத்து செல்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கின்றனர்.

ராமநாதசுவாமி கோவில் கிழக்கு ரத வீதியில் பக்தர்கள் நிறைந்து கானப்படும் பகுதி தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. 

ராமேசுவரம் வரும் பக்தர்கள் மற்றும் சற்றுலா பயணிகளுக்கு நகராட்சியில் தீவு லாட்ஜ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 115 விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகள் மூலம் மாதம் ஒன்றுக்கு நகராட்சிக்கு 12 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை தொழில் மற்றும் சொத்து வரி செலுத்துகின்றனர்.

இதேபோன்று அங்கீகாரமின்றி, விடுதிகள் போல 300-க்கும் மேற்பட்ட வீடுகள்  செயல்படுகின்றன. மேலும் சங்கு கடைகள், சுவாமி படம் விற்பனை செய்யும் வியாபாரிகள், தனியார் சுற்றுலா வாகன ஏற்பாட்டாளர்கள், வாடகை கார், ஆட்டோ என 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது ராமநாத சுவாமி கோவில். 

ராமநாத சுவாமி கோயில் வடக்கு ராஜகோபுரம் பகுதி வழியாக பக்தர்கள் தீர்த்த கிணறுகளில் புனித நீராட செல்லும் வழி தற்போது பூட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு மார்ச் 24 முதல் தற்போது வரையில் கோவில் 90 நாள்கள் கடந்தும்  மூடப்பட்டுள்ளது. இதனால் முற்றிலும் வாழ்வாதாரத்தை இழந்துள்ள பொதுமக்கள் என்ன செய்து எனத் தெரியாமல் கவலையில் உள்ளனர். 

தீவு லாட்ஜ் உரிமையாளர்கள் சங்க செயலாளர் ஏ.நாகராஜ் கூறுகையில், "கரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த மார்ச் 18 ஆம் தேதி முதல் லாட்ஜ்களை மூடத் தமிழக அரசு உத்தரவிட்டது. 3 மாதங்கள் கடந்தும் இன்று வரை திறக்காமல் இருந்து வருகிறோம். ஒவ்வொரு விடுதியிலும் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், அவர்களின் குடும்பத்தைக் கருத்தில்கொண்டு உணவுக்குத் தேவையான ஊதியத்தை வழங்கி வருகிறோம். இன வரும் காலங்களில் எங்களால் கொடுக்க முடியுமா ெனத் தெரியவில்லை. இந்த பொது முடக்கத்தின் போது தமிழக அரசு நகராட்சிக்கு செலுத்தப்படும் தொழில் மற்றும் சொத்து வாரியைத் தள்ளுபடி செய்ய வேண்டும். வங்கிகளில் பெறப்பட்டுள்ள கடனுக்கு வட்டி தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் மீண்டும் விடுதிகளைத் திறந்து நடத்த முடியும். இல்லையேல் விடுதி உரிமையாளர்கள் என்ன செய்வது என்று தெரியாத நிலையில் உள்ளனர்" என்றார். 

ராமநாதசுவாமி கோவில் தெற்கு ராஜகோபுரம் தெற்கு வாசல் பகுதியில் 90 நாட்களுக்கு மேலாக பூட்டப்பட்டுள்ள தனியார் விடுதிகள்.

அகில இந்திய யாத்திரை பணியாளர் சங்கத் தலைவர் அ.பாஸ்கரன் கூறுகையில்,   "தங்களது சங்கத்தில் 425 உறுப்பினர்கள் உள்ளனர். பக்தர்களின் அளிக்கும் காணிக்கை மூலம் பல ஆண்டுகள் வாழ்ந்து வந்தனர். தற்போது பொது முடக்கம் காரணமாக 90 நாள்கள் கோவில் திறக்காமல் உள்ளதால் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளனர். மேலும் சில நபர்கள் கட்டுமானப்  பணிக்கு செல்லுகின்றனர். பலர் வீட்டில் உள்ள நகைகளை விற்று உணவுத் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். 525 யாத்திரை பணியாளர்களின் குடும்பத்தைப் பாதுகாக்க தமிழக அரசு மானிய கடன் வழங்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தனர்.  

ராமேசுவரம் கிழக்கு ரத வீதிகளில் உள்ள சங்கில் தயாரிக்கப்பட்டு பக்தர்களின் விற்பனை செய்யப்படும் கடைகள் பொழுதுபோக்கும் இடமாக மாறி உள்ளன.

மேலும் ராமநாத சுவாமி கோவிலைத் தமிழக அரசு திறக்க வேண்டும், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது போல கோவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு கோவிலைத் திறக்க உரிய வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்து அதனைப் பின்பற்றிக் கோவிலைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய யாத்திரை பணியாளர் சங்கத் தலைவர்  அ. பாஸ்கரன் தெரிவித்தார்.

கரோனாவும் பொது முடக்கமும் பகுதியளவேனும் முடிவுக்கு வந்து ராமநாத சுவாமி கோவிலையே நம்பியிருக்கும் ராமேசுவரம் மக்களின் வாழ்க்கையைக் காக்க வழிபிறக்க வேண்டும் எனத் தீவு மக்கள் அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com