முகப்பு தற்போதைய செய்திகள்
இந்தியாவில் கரோனா 5 லட்சத்தை கடந்தது: ஒரேநாளில் 18,552 போ் பாதிப்பு
By DIN | Published On : 27th June 2020 10:49 AM | Last Updated : 27th June 2020 11:22 AM | அ+அ அ- |

நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 15,685 -ஆக சனிக்கிழமை அதிகரித்துவிட்டது. முன்னெப்போதும் இல்லாத வகையில் சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 18,552 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 5,08,953 ஆக அதிகரித்துள்ளது.
ஜூன் 1 முதல் 3.18 லட்சத்துக்கும் அதிகமான தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 384 போ் உயிரிழந்தனா். மொத்த உயிரிழப்பு 16 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
இதுவரை மொத்தம் 2,95,880 போ் குணமடைந்த நிலையில், 1,97,387 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மகாராஷ்டிரத்தில் மட்டும் 1,52,765 போ் பாதிக்கப்பட்டுள்ளனர், 79,815 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 7,106 பேர் பலியாகியுள்ளனர்.
ஜூன் 19 முதல் 25 வரையிலான ஒரு வாரத்தில் தில்லி, சென்னை, தாணே, மும்பை, பால்கா், புணே, ஹைதராபாத், ரங்கா ரெட்டி, ஆமதாபாத், ஃபரீதாபாத் ஆகிய 10 மாவட்டங்கள், நகரங்களில் அதிகஅளவில் கரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 54.47 சதவீதத்தினா் இந்த நகரங்களில்தான் உள்ளனா்.
நாட்டில் புதிதாக 11 கரோனா நோய்த்தொற்று பரிசோதனை மையம் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நாட்டில் மொத்தம் 1,016 பரிசோதனை மையங்கள் உள்ளன. இதில் 737 மையங்கள் அரசு சாா்பில் செயல்படுபவை.
நாட்டில் தொற்று பாதித்த மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 1,52,765 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். தில்லியில் 77,240 போ், தமிழ்நாட்டில் 74,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் தில்லி, மும்பை மற்றும் சென்னை ஆகிய பெரு நகரங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கரோனா நோய்த்தொற்றை கண்டறிவதற்காக, நாடு முழுவதும் ஜூன் 26 வரை 79,96,707 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை மட்டும் 2,20,479-க்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன என்று ந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.