முகப்பு தற்போதைய செய்திகள்
திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோவிலில் ஆனித் திருமஞ்சன வழிபாடு
By DIN | Published On : 27th June 2020 02:28 PM | Last Updated : 27th June 2020 02:28 PM | அ+அ அ- |

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர்
காரைக்கால்: திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோவிலில் ஸ்ரீ நடராஜருக்கு ஆனித் திருமஞ்சன வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு ஆண்டில் 6 முறை நடைபெறும் திருமஞ்சனம் சிறப்புக்குரியதாகும். குறிப்பாக மார்கழி மாதத்தில் திருவாதிரை நாளிலும், ஆனி மாதத்தில் உத்திர நட்சத்திர நாளிலும் நடைபெறக்கூடிய திருமஞ்சனம் மிகுந்த சிறப்புக்குரியதாகும்.
ஸப்தவிடங்க தலங்களில் ஒன்றான திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோவிலில் ஆனித் திருமஞ்சனம் ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த திருமஞ்சன வழிபாடு சனிக்கிழமை 11 மணியளவில் தொடங்கப்பட்டது. நடராஜர் சந்நிதி முன்னபாக கலசங்கள் வைத்து விக்னேஸ்வர பூஜை செய்யப்பட்டது. பின்னர் ஸ்ரீ நடராஜருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், இளநீர், தேன், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்புத் திருமஞ்சனம் செய்யப்பட்டது. நடராஜருடன் ஸ்ரீ சிவகாமி அம்பாள், ஸ்ரீ மாணிக்கவாசகர் ஆகியோருக்கும் திருமஞ்சனம் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
பொதுவாக சனிக்கிழமையில் திருநள்ளாறு கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரக்கூடிய நிலையில், கரோனா பரவலால் வெளியூர் மக்கள் காரைக்காலுக்குள் வரமுடியாததால், கோவிலில் மிகக் குறைந்த உள்ளூர் பக்தர்களே இருந்து திருமஞ்சன வழிபாட்டில் பங்கேற்றனர்.
இதுபோல காரைக்காலில் பிரசித்திப் பெற்ற கைலாசநாதர் கோவில், பார்வதீசுவரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் ஆனித் திருமஞ்சன வழிபாடு நடைபெற்றது.