கடையத்தில் பாரதியார் - செல்லம்மாள் 123 ஆவது திருமண நாள் விழா
By DIN | Published On : 27th June 2020 12:58 PM | Last Updated : 27th June 2020 12:58 PM | அ+அ அ- |

பாரதியார் - செல்லம்மாள் 123 ஆவது திருமண நாள் விழாவில் நிவாரணப் பொருள் வழங்குகிறார் காவல் உதவி ஆய்வாளர் காஜா முகைதீன்
பாரதி செல்லம்மாவின் ஊரான கடையத்தில் சேவாலயா சார்பில் பாரதியார் - செல்லம்மா ஆகியோரின் 123ஆவது திருமண நாள் விழா சனிக்கிழமைக் கொண்டாடப்பட்டது.
கடையம் சத்திரம் பாரதி மேல்நிலைப்பள்ளியில் கரோனா பொது முடக்க விதிமுறைகளான, முகக் கவசம் அணிவது, கைகளை கிருமி நாசினிக் கொண்டு கழுவுவது, சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது உள்ளிட்ட விதிமுறைகளுடன் நடைபெற்ற நிகழ்ச்சியில் 100 பேருக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.
முன்னதாக காணொளி காட்சி மூலம் எழுத்தாளர் இசைக்கவி ரமணன், பாரதி செல்லம்மாளின் கொள்ளுப் பேரன் ராஜ்குமார் பாரதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சேவாலயா நிறுவனர் முரளி காணொளிக் காட்சிகளை நெறிப்படுத்தினார்.
திருமண நாளை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சத்திரம் பாரதி மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியை மீரா, கடையம் காவல் உதவி ஆய்வாளர் காஜாமுகைதீன், தலைமை ஆசிரியர் (ஓய்வு) கல்யாணி சிவகாமி நாதன், கோபால், செயல் அலுவலர் (ஓய்வு) அருணாசலம், தொழிலதிபர் சண்முகவேல், தமிழறிஞர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.