சீனப் பொருள் புறக்கணிப்பு: விட்டுவிலகுவது எளிதல்ல?

இந்திய ராணுவத்தினரும் சீன ராணுவத்தினரும்  மோதிக் கொண்டதைத் தொடர்ந்து சீனப் பொருள்களைப் புறக்கணிக்க வேண்டும் என்றொரு முழக்கம் பரவலாக சில வட்டாரங்களில் முன்வைக்கப்பட்டாலும் நடைமுறையில் அவ்வளவு எளிதல்ல..
கல்வான் பள்ளத்தாக்கு
கல்வான் பள்ளத்தாக்கு


எல்லையில்  இந்திய ராணுவத்தினரும் சீன ராணுவத்தினரும்  மோதிக் கொண்டதைத் தொடர்ந்து சீனப் பொருள்களைப் புறக்கணிக்க வேண்டும் என்றொரு முழக்கம் பரவலாக சில வட்டாரங்களில் முன்வைக்கப்பட்டாலும் நடைமுறையில் அவ்வளவு எளிதல்ல எனக் கூறப்படுகிறது.

எல்லையில் நடந்த மோதலில் இந்தியத் தரப்பில் 20 ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர். சீனத் தரப்பில் உயிரிழப்பு பற்றி எதுவும் முறைப்படி அறிவிக்கப்படவில்லை. இந்தத் தாக்குதலுக்கு ராணுவ ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் இந்தியா தக்க பதிலடி தர வேண்டும் என்று பரவலாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது எந்தளவுக்கு சாத்தியம்?

அணு ஆயுதங்களை வைத்துள்ள இரு நாடுகளுக்கு இடையே ராணுவ ரீதியில் நேரிடக் கூடிய மோதல் மிக மோசமானதாகவே இருக்கும். சீன வணிகம் மற்றும் பொருள்களைப் புறக்கணிக்க முடியுமா?

கார்களில் தொடங்கி செல்லிடப் பேசிகள்,  மருந்துப் பொருள்கள் வரை இந்தியாவுக்கான மூலப் பொருள்களை வழங்குவதில் சீனாவுக்குப் பெரிய பங்கிருக்கிறது. சொல்லப் போனால், இந்திய ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் புல்லட் புரூப் கவசத்துக்கான மூலப் பொருளே சீனாவிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது.

சீன மோதலுக்கு முன்னரே கரோனா காலப் பொருளாதார சீர்குலைவை முன்வைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தற்சார்பு பொருளாதார இயக்கத்திற்கான தேவை பற்றி அறிவித்திருந்தார்.

ஆனால், பொருளாதார உறவுகளில் சீனாவை விட்டு விலகுவது அவ்வளவு எளிதல்ல எனத் தகவறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் ஒட்டுமொத்த வணிகப் பங்களிப்பில் சீனாதான் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. சீனாவிலிருந்துதான் அதிகளவிலான பொருள்கள், மூலப் பொருள்கள் இந்தியாவில்  இறக்குமதி செய்யப்படுகின்றன.

மாறாக, இந்தியாவிலிருந்து சீனா இறக்குமதி செய்யும் அளவு மிகக் குறைவாகவே இருக்கிறது. இன்னமும் தெளிவாகச் சொன்னால் சீனாவின் வணிகத்தில் (இறக்குமதியில்) முதல் 15 இடங்களில்கூட இந்தியா இல்லை. இந்தப் பட்டியலில் இந்தியா மிகவும் பின்தங்கிதான் இருக்கிறது.

இந்தியாவின் பொருளாதார புறக்கணிப்பால் சீனாவுக்குப் பெரியளவில் பாதிப்பு எதுவும் இருக்காது என்கிறார் தில்லியிலுள்ள அப்சர்வர் ஆய்வு நிறுவனத்திலுள்ள சீன வணிகத்தைப் பற்றிய ஆய்வாளரான மனோஜ் ஜோஷி.

சீன மோதல் நடந்த மூன்று நாள்களுக்குப் பின்னர் பேசிய பிரதமர் மோடி,  பொருளாதார தற்சார்பு பற்றிக் குறிப்பிடுகையில், இறக்குமதிகளைச் சார்ந்திருப்பதை இனி இந்தியா குறைத்துக்கொள்ளும் என்றார். தற்சார்பு என்றால், நாம் இறக்குமதி செய்துகொண்டிருக்கும் பொருள்களையே ஏற்றுமதி செய்யும் அளவுக்கு பெரிய ஏற்றுமதியாளராவதும்தான் என்றார் அவர்.

இந்தியாவில் தொழில்புரியும் சீன நிறுவனங்களுக்கு சில நெருக்கடிகளைத் தற்போது இந்தியா தருவதைப் போன்ற சில அறிகுறிகள் தென்படுகின்றன. அண்மைக்காலமாக மின்னணு வணிகத்தில் விற்கப்படும் பொருள்களில் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்பதைக் குறிப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது, இதேபோல வணிகர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இவ்விரண்டு நடவடிக்கைகளுமே சீன இறக்குமதியைக் குறைக்கும் நோக்கம் கொண்டவையே எனக் கருதப்படுகிறது. 

ஏற்கெனவே, ஏப்ரலில் சீனாவின் அனைத்து நேரடி முதலீடுகளையும் மறுபரிசீலனை செய்யப்படும் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.

தொலைத்தொடர்புத் தொழிலில்தான் பெரிய சோதனை. இந்தியாவில் சீனாவின் செல்வாக்கு அதிகமுள்ள மற்றொரு துறை தொலைத்தொடர்புத் தொழில்துறை - செல்லிடப் பேசிகள்.  இந்தியாவின் மின்னணு சாதனங்களின் இறக்குமதியில் ஏறத்தாழ 40 சதவிகிதம் சீனாவிலிருந்துதான்.

மேலும், ஸ்மார்ட்போன் செல்லிடப் பேசிகளைப் பொருத்தவரை  கடந்த ஆண்டு இந்திய சந்தையில் 72 சதவிகித அளவுக்கு  சீன செல்லிடப்பேசிகள்தான் கைப்பற்றியிருந்தன.

இவையன்றி,  அடுத்த தலைமுறை செல்லிடப் பேசி சேவையான 5ஜி மொபைல் கட்டமைப்பை உருவாக்குவதில் சீனாவின் ஹுவேய் டெக்னாலஜிஸ் நிறுவனத்தை அனுமதிப்பதா, வேண்டாமா என கடுமையான யோசனையில் இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

2018-ல் இந்திய ராணுவத்துக்காக ஒரு லட்சத்துக்கும் அதிகமான புல்லட் புரூஃப் - குண்டுதுளைக்காத கவசங்களைத் தயாரித்தளிக்கும் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ள நிறுவனம் எஸ்எம்பிபி. ஆனால், இவற்றைத் தயாரிப்பதற்கான மூலப் பொருள்களுக்காக சீனாவையே நம்பியிருப்பதாகக் கூறப்படுகிறது.  எனினும், தேவைப்பட்டால், சீனாவைத் தவிர்த்து வேறு வழிவகைகளைக் கண்டறிய முடியும் என்றும் நம்புகிறது.

இந்தியாவின் துணை நிலை ராணுவப் படைகளுக்கும் காவல்துறைக்கும் புல்லட் புரூஃப் கவசங்களைத் தயாரித்தளிக்கும் ஸ்டார் வயர் என்ற நிறுவனமும் மூலப் பொருளான உயர்தர பாலிஎதிலீனைச் சீனாவிடமிருந்துதான் இறக்குமதி செய்கிறது. இதே மூலப் பொருள்கள், அமெரிக்கா அல்லது ஐரோப்பாவிலும் கிடைக்கும், ஆனால், விலை அதிகம்.  அரசு அறிவுறுத்தினால் இவர்களும்கூட இறக்குமதி செய்யும் நாட்டை மாற்றிக் கொள்ளத்தான் வேண்டியிருக்கும்.

உலகின் மருந்துத் தயாரிப்புத் தொழில் துறையில் இந்தியா மிகப் பெரிய பங்கைப் பெற்றிருக்கிறது. ஆனால், இந்தத் துறையும் மூலப் பொருள்களுக்காக சீனாவையே நம்பியுள்ளது.

இந்திய மருந்துகள் தயாரிப்பாளர்கள் பயன்படுத்தும் மூலப்பொருள்களில் சுமார் 70 சதவிகித அளவுக்கு சீனாவிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த மோதலுக்கெல்லாம் முன்னரே மருந்துத் துறையில் சீனாவைச் சார்ந்திருக்கும் நிலையை மாற்ற வேண்டும் என்ற முயற்சிகளை இந்தியா மேற்கொண்டது. எனினும், அவ்வளவு எளிதானதாகவோ, விரைந்து நடைபெறக் கூடியதாகவோ இல்லை.

தொலைத்தொடர்பு மற்றும் மருந்துத் தொழில் துறையில் சீனாவை நம்பியில்லாமல் சமாளிப்பது எவ்வாறு என்பதில் உண்மையிலேயே இந்தியா பெரும் முயற்சிகளையும் திட்டமிடலையும் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

இவ்வாறு எண்ணற்ற சிக்கல்களுடன்தான் இருக்கிறது  இந்திய - சீன பொருளாதாரச் சார்புச் செயல்பாடுகள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com