சாத்தான்குளம் சம்பவம்: முகநூலில் பதிவிட்ட ஆயுதப்படை காவலர் சதீஷ்முத்து தற்காலிக பணியிடை நீக்கம்

சென்னை பெருநகர காவல் ஆயுதப்படையில் பணிபுரிந்து வரும் சதீஷ்முத்து என்பவர் அவரது முகநூல் பக்கத்தில் சாத்தான்குளம் நிகழ்வு குறித்து ஒரு பதிவினை பதிவிட்டிருந்தார்.
சாத்தான்குளம் சம்பவம்: முகநூலில் பதிவிட்ட ஆயுதப்படை காவலர் சதீஷ்முத்து தற்காலிக பணியிடை நீக்கம்

சாத்தான்குளம் சம்பவத்த்தினை சமூக வலைதளங்களில் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டு, காவல்துறைக்கு களங்கத்தினை ஏற்படுத்திய காரணத்திற்காக காவலர் சதீஷ்முத்து தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரையும் விசாரணைக்காக அழைத்துச் சென்ற காவலர்கள் கோவில்பட்டி சிறையில் வைத்து கொடூரமாகத் தாக்கியதில் அவர்கள் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

காவலர்களின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலால் ஏற்பட்ட இருவர் உயிரிழப்புச் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த விவகாரம் தற்போது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

காவலரின் மிருகத்தனமான செயலை பொதுமக்களும், பல்வேறு தரப்பினரும் கண்டித்து வருகின்றனர். நடவடிக்கை எடுக்கவேண்டிய அரசோ, பணியிடைநீக்கம் மட்டும் செய்து குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையே, பால் முகவர்களுக்கும் காவலர்களுக்கும் ஏற்படும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வரை அவர்களது வீடுகளுக்கு பால் விநியோகம் செய்யமாட்டோம் என பால் முகவர்கள் சங்கம் அறிவித்தது.

இந்நிலையில், காவலர்கள் சிலர் சாத்தான்குளம் படுகொலையை ஆதரிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தான்குளம் லாக்கப் படுகொலையை ஆதரிக்கும் விதமாகவும், வணிகர்களை அச்சுறுத்தும் விதமாகவும் இழிவான வகையில் சமூக வலைதளங்களில் சில காவலர்கள் பதிவிட்டு வருவது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனிதாபிமானமற்ற முறையில் மக்களை மிரட்டும் இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்நிலையில், சென்னை பெருநகர காவல் ஆயுதப்படையில் பணிபுரிந்து வரும் சதீஷ்முத்து என்பவர் அவரது முகநூல் பக்கத்தில் சாத்தான்குளம் நிகழ்வு குறித்து ஒரு பதிவினை பதிவிட்டிருந்தார்.

அப்பதிவானது காவல்துறைக்கு களங்கத்தினை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இது குறித்து அவரிடம் விசாரணை நடத்தியதில் தனது முகநூல் கணக்கு மற்றும் அதன் ரகசிய குறியீடு ஆகியவற்றை தனது நண்பர்களிடம் பகிர்ந்திருந்ததாகவும், தனக்கு தெரியாமல் யாரோ அப்பதிவினை பதிவிட்டதாக கூறினார்.

இவ்வாறு பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டு, காவல்துறைக்கு களங்கத்தினை ஏற்படுத்திய காரணத்திற்காக காவலர் சதீஷ்முத்து தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com