ம.பி. நெருக்கடியைத் தீர்ப்பதற்கு மூத்த தலைவர்களை நியமித்தது காங்கிரஸ்

மத்திய பிரதேசத்தில் கமல்நாத்  தலைமையிலான காங்கிரஸ் அரசின் தலைவிதி குறித்து நிச்சயமற்ற தன்மை நிலவுகின்ற நேரத்தில், மூத்த தலைவர்கள் குழுவொன்றை காங்கிரஸ் நியமித்துள்ளது.
ம.பி. நெருக்கடியைத் தீர்ப்பதற்கு மூத்த தலைவர்களை நியமித்தது காங்கிரஸ்


புதுதில்லி: மத்திய பிரதேசத்தில் கமல்நாத்  தலைமையிலான காங்கிரஸ் அரசின் தலைவிதி குறித்து நிச்சயமற்ற சூழல் நிலவுகின்ற நேரத்தில், மாநிலத்தில்  நிலவும் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு கட்சியின் மூத்த தலைவர்களை காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி கேட்டுக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மத்திய பிரதேசத்தில் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் 22 எம்.எல்.ஏ.க்கள் செவ்வாய்க்கிழமை காங்கிரஸிலிருந்து விலகினர். அவர்களில் 6 பேர் அமைச்சர்களாவர். 22 பேரின் ராஜிநாமாவை அடுத்து தனது அரசைக் காப்பாற்றுவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மாநில முதல்வர் கமல்நாத் மேற்கொண்டு வருகிறார். 

கட்சி எம்.எல்.ஏக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக முன்னாள் மத்திய அமைச்சர் முகுல் வாஸ்னிக், மூத்த தலைவர் ஹரிஷ் ராவத் மற்றும் மத்தியப் பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளர் தீபக் பபாரியா ஆகியோர் போபாலுக்கு வந்துள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிருப்தி அடைந்தவர்களுக்கும் கட்சிக்கும் இடையில் சமரசம் செய்யவும் அவர்களின் குறைகளைத் தீர்ப்பதற்கும் மூத்த தலைவர்கள் பணிக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

முன்னதாக, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் மூத்த தலைவர் ஹரிஷ் ராவத் ஆகியோருடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார்.

மறுபுறம், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சிலர் பெங்களூருவில் தங்கியிருப்பதால் அவர்களை சமாதானம் செய்வதற்காக சஜ்ஜன் சிங் வர்மா மற்றும் கோவிந்த் சிங் ஆகிய இரு தலைவர்களை பெங்களூருக்கு அனுப்பியுள்ளது காங்கிரஸ் மேலிடம். இதனிடையே, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் புதன்கிழமை போபாலில் இருந்து ஜெய்ப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றனர். 

முன்னதாக, திக்விஜய் சிங் உள்பட பல காங்கிரஸ் தலைவர்கள், குதிரை வர்த்தகம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசை வீழ்த்துவதற்காக பாஜக சதி செய்துள்ளதாகக் குற்றம் சாட்டினர்.

மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் செவ்வாய்க்கிழமை, சட்டப்பேரவையில் கட்சி தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் என்பதால் கவலைப்பட ஒன்றுமில்லை என்றும், தனது அரசு முழுப் பதவிக் காலத்தையும் நிறைவு செய்யும் என்றும் கூறினார்.

இருப்பினும், சிந்தியாவின் ராஜிநாமா, கமல்நாத் அரசுக்கு ஒரு சவாலான நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸை விட்டு வெளியேற சிந்தியா எடுத்த முடிவைத் தொடர்ந்து அவருக்கு விசுவாசமான 22 கட்சி எம்.எல்.ஏ.க்களும் ராஜிநாமா செய்துள்ளனர். 

இந்த நிலையில், காங்கிரஸில் இருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா, புதன்கிழமை பாஜகவில் இணைந்துள்ளார். 

நான்கு முறை மக்களவை உறுப்பினராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா, பாஜக சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக தோ்ந்தெடுக்கப்பட்டு, அவருக்கு மத்திய அமைச்சா் பதவி வழங்கப்படலாம் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

மத்தியப் பிரதேசத்தில் வரும் 26-ஆம் தேதி, மாநிலங்களவைக்காக 3 இடங்களுக்குத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு தலா ஒரு இடத்தில் வெற்றி உறுதியாக உள்ள நிலையில், தற்போது சிந்தியா பாஜகவில் இணைந்துள்ளதால் 3-ஆவது இடத்தையும் பாஜகவே கைப்பற்றும் எனக் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com