சொந்த மகளை ரூ.10 ஆயிரத்துக்கு விற்ற தாய்

உத்தரப் பிரதேசம் மாநிலம் மொராதாபாத் மாவட்டம் கத்கர் பகுதியில் பிறந்து ஏழு நாளான சொந்த மகளை ரூ .10,000 க்கு விற்றதாக தாய் மீது
சொந்த மகளை ரூ.10 ஆயிரத்துக்கு விற்ற தாய்



மொராதாபாத்:  உத்தரப் பிரதேசம் மாநிலம் மொராதாபாத் மாவட்டம் கத்கர் பகுதியில் பிறந்து ஏழு நாளான சொந்த மகளை ரூ .10,000 க்கு விற்றதாக தாய் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பக்கத்து வீட்டாரிடம் விற்ற தனது மகளைத் திரும்பப் பெற விரும்புவதாகக் கூறி, அந்தப் பெண் எஸ்.எஸ்.பி அலுவலகத்திற்கு புகார் தெரிவித்ததை அடுத்து இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்த பெண்மணி பிறந்து ஏழு நாளே ஆன தனது பெண் குழுந்தையை இரண்டு மாதங்களுக்கு முன்பு பக்கத்து வீட்டு பெண் ரேகாவிடம் விற்றதாக ஒப்புக்கொண்டார்.

இதுகுறித்து போலீஸார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  திருமணமாகி மூன்று ஆண்டுகள் கடந்த அந்த பெண்ணுக்கு, ஜனவரி 4 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்ததையடுத்து அவரது கணவர் அவரிடம் இருந்து பிரிந்து சென்றதை அடுத்து பச்சிளம் குழந்தையை வைத்துக்கொண்டு மிகவும் கஷ்டத்தில் வசித்து வந்துள்ளார்.

இதையடுத்து குழந்தையை தத்தெடுக்க பக்கத்து வீட்டு பெண் ரேகா முன்வந்துள்ளதை அடுத்து, முத்திரைத் தாளில் 'தத்தெடுப்பு ஒப்பந்தம்' தயாரிக்கப்பட்டு. ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, குழந்தையின் தாய் சம்மதத்திற்காக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. 
 
குழந்தையை விற்ற இரண்டு மாதங்களுக்குப் பிறகு, மனம் மாறிய அந்தப் பெண், குழந்தைய விற்ற பக்கத்து வீட்டு பெண் ரேகாவை அணுகி, தனது மகளைத் திருப்பித் தருமாறு கேட்டுள்ளார், ஆனால் அவர் மறுத்துவிட்டார்.

குழந்தையை பெற்ற தாய் போன்று கவனமாகவும், பாசமாகவும் காப்பாற்றி வரும் திருமணம் ஆகாத ரேகா கூறுகையில்,   நான் ஜனவரி 8 ஆம் தேதி சிறுமியைத் தத்தெடுத்தேன். அப்போது அவரது உடல்நிலை நிலை மிகவும் மோசமாக இருந்தது. தத்தெடுப்பு ஒப்பந்தம் செய்துதான் குழந்தை வாங்கினேன், ஆனால் ஒரு குழந்தையை தத்தெடுப்பதற்கான வழிமுறைகளை தான் அறிந்திருக்கவில்லை என்று கூறினார். 

கூடுதல் எஸ்.பி. தீபக் புக்கர் கூறுகையில், "ரேகா, குழந்தை இறக்கும் தருவாயில் இருந்தபோது சிறுமியை தத்தெடுத்து காப்பாற்றி வந்துள்ளார். பச்சிளம் குழந்தையை விற்ற தாய் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். தத்தெடுப்பு குறித்த முடிவை குழந்தைகள் நலக் குழுவினர் எடுக்கப்பார்கள்" என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com