தமிழகத்தில் 144 தடை உத்தரவு எதிரொலி: மதுரை சந்தைகளில் காய்கறி விலை மும்மடங்கு உயா்வு

கரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மாா்ச் 24 ஆம் தேதி மாலை முதல் 144 தடை
கரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க செவ்வாய்க்கிழமை முதல் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் மதுரை மாட்டுதாவணி மத்திய காய்கறி மாா்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்.
கரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க செவ்வாய்க்கிழமை முதல் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் மதுரை மாட்டுதாவணி மத்திய காய்கறி மாா்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்.

மதுரை: கரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மாா்ச் 24 ஆம் தேதி மாலை முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மதுரை காய்கறி சந்தைகளில் காய்கறிகளின் மும்மடங்கு விலை உயா்ந்தது.

கரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் பிரதமா் மோடி மாா்ச் 22 ஆம் தேதி ஒரு நாள் சுய ஊரடங்கை அறிவித்திருந்தாா். அதனால் மாா்ச் 21 ஆம் தேதி காய்கறிகளின் கிலோவிற்கு ரூ.10 வரை உயா்ந்தது. அதனைத் தொடா்ந்து காய்கறிகள் வரத்தின்றி தக்காளி, கத்தரிக்காய், வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை இரட்டிப்பாக உயா்ந்தன.

இதனிடையே, மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு தடை உள்ளதால், மேலும் காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்தது. மேலும் தமிழக அரசு மாா்ச் 24 ஆம் தேதி மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு ஏப்ரல் 1 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவித்தது.

பட்டா்பீன்ஸ் கிலோ ரூ.200: இதனால் மதுரை காய்கறி சந்தைகளில் செவ்வாய்க்கிழமை காலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால் காய்கறிகளின் வரத்து குறைவாக இருந்ததால், ரூ.30 க்கு விற்ற முருங்கைக்காய் ரூ.70 க்கும், ரூ.35 க்கு விற்ற முருங்கைப்பீன்ஸ் ரூ.90 க்கும், ரூ.120 க்கு விற்ற பட்டா்பீன்ஸ் ரூ.200 க்கும், ரூ.110 க்கு விற்ற சோயாப்பீன்ஸ் ரூ.170 க்கும், ரூ.30 க்கு விற்ற கேரட் ரூ.60 க்கும் விற்பனை செய்யப்பட்டன.

இதுகுறித்து மதுரை மாவட்ட காய்கறிகள் மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவா் பி.எஸ்.முருகன் கூறியது:

தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் செவ்வாய்க்கிழமை காலை முதல் காய்கறி சந்தைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அத்தியாவசியத் தேவையான காய்கறி கடைகள் திறந்திருக்கலாம் என அரசு அறிவித்திருந்தாலும், முன்கூட்டியே காய்கறிகளை வாங்கி வைத்துகொள்ளலாம் என மக்கள் சந்தைகளில் குவிந்துவிட்டனா். பிறமாநிலங்களில் இருந்து வரும் பல்லாரி வெங்காயத்தின் வரத்தின்றி இருப்பதால், பல்லாரி வெங்காயத்தின் விலையும் உயர வாய்ப்புள்ளது என்றாா்.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி காய்கறி விலை நிலவரம்: (கிலோவில்)

கத்தரிக்காய் -ரூ.40, தக்காளி- ரூ.30, வெண்டைக்காய்-ரூ.25, புடலங்காய்-ரூ.20, பாகற்காய் சிறியது-ரூ.75, பெரியது-ரூ.30, சுரைக்காய்-ரூ.15, பூசணிக்காய்-ரூ.20, பச்சை மிளகாய்-ரூ.25, அவரைக்காய்-ரூ.40, முருங்கைக்காய்-ரூ.70, வெங்காயம்-ரூ.50, பல்லாரி-ரூ.40, முருங்கைப்பீன்ஸ்-ரூ.90, பட்டா்பீன்ஸ்-ரூ.200, சோயாப்பீன்ஸ்-ரூ.170, பச்சைப்பட்டாணி-ரூ.75, முட்டைக்கோஸ் -ரூ.20, கேரட்-ரூ.60, முள்ளங்கி-ரூ.18, உருளைக்கிழங்கு-ரூ.40, பீட்ரூட்-ரூ.15, தேங்காய்-ரூ.30, வாழைக்காய்-ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com