Enable Javscript for better performance
அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்த்தாமல் விற்க வேண்டும்: வியாபாரிகளுக்கு முதல்வர் நாராயணசாமி வேண்டுக- Dinamani

சுடச்சுட

  

  அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்த்தாமல் விற்க வேண்டும்: வியாபாரிகளுக்கு முதல்வர் நாராயணசாமி வேண்டுகோள்

  By DIN  |   Published on : 26th March 2020 01:18 PM  |   அ+அ அ-   |    |  

  vn


  காரைக்கால்: கரோனா வைரஸ் பரவல் என்பது மக்கள் பிரச்னையாக இருக்கும் நிலையில், வியாபாரிகள் அத்தியாவசியப் பொருள்களை விலையை உயர்த்தாமல் வியாபாரம் செய்யவேண்டும் எனவும், பொருள்கள் புதுவையில் தட்டுப்பாடின்றி கிடைக்க அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக முதல்வர் வே.நாராயணசாமி கூறினார்.

  காரைக்காலில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க எடுத்திருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக வியாழக்கிழமை வந்த அவர், மாவட்ட ஆட்சியரகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்திக்குப் பின் செய்தியாளர்களிடம் முதல்வர் வே.நாராயணசாமி கூறியது :

  புதுச்சேரி யூனியன் பிரதேசம் பிரான்ஸ் தொடர்புடையதாகும். அந்நாட்டு மக்கள் புதுச்சேரிக்கு வந்து செல்கின்றனர். காரைக்காலை சேர்ந்தோரும் பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா, துபை போன்ற நாடுகளுக்கு சென்று வருபவர்கள். எனவே இந்த பிராந்தியங்களில் கரோனா பரவாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கும்போது, மக்கள் முழு ஒத்துழைப்புத் தரவேண்டும். காரைக்காலில் வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து கடந்த ஒரு மாதத்தில் 334 பேர் வந்துள்ளனர். இவர்களில் 4 பேருக்கு கரோனா குறித்த சந்தேகத்தின்பேரில் உமிழ் எடுத்து பரிசோதித்தபோது இல்லை என அறிக்கை வந்துள்ளது. எனினும் 185 பேர் அவரவர் வீடுகளில் தனியாக தங்கவைத்து, மருத்துவக் குழுவினரால் கண்காணிக்கப்பட்டுவருகின்றனர்.

  தமிழகத்தில்கூட கரோனா வைரஸ் பரவியோர் எண்ணிக்கை கூடுகிறது. இறப்பும் ஏற்பட்டுள்ளது. ஆனால் புதுச்சேரியில் இதுவரை யாரும் பாதிக்கப்படவில்லை. உலக அரங்கில் கரோனா தாக்கம் அதிகரித்தாலும், புதுவை மக்கள் விழிப்போடு எதிர்க்கிறார்கள். எனினும் ஊடரங்கில் நகரப் பகுதி மக்கள் ஒத்துழைக்கிறார்கள், கிராமப்புற மக்கள் மேலும் விழிப்புணர்வு பெறவேண்டியுள்ளது.

  புதுச்சேரியில் அனைத்து அமைச்சர்களும் ஒருங்கிணைந்து கரோனா எதிர்ப்பு குறித்து முடிவுகள் எடுத்து நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. ஏப்.14}ஆம் தேதி வரை மக்கள் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ளவேண்டும் என இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன். 

  அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. புதுச்சேரியிலும், காரைக்காலிலும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் அத்தியாவசியப் பொருள்கள் போன் செய்தால், வீடு தேடி வந்து தரக்கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது அடுத்த சில நாள்களில் அமலுக்கு வரும். தேவையின்றி வாகனங்களில் ஊர் சுற்றுவோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும்.

  வியாபாரிகள் மளிகை, காய்கனி, இறைச்சி போன்றவற்றை விற்கும்போது, சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி விலையை உயர்த்தி விற்கக்கூடாது. இது தேசத்தின் மக்கள் பிரச்னை என்பதை வியாபாரிகள் உணர்ந்து செயல்படவேண்டும். அத்தியாவசியப் பொருள்கள் வாங்க  செல்லும் மக்களை போலீஸôர் கண்டிப்புடன் நடத்தாமல், தேவையை அறிந்துகொண்டு அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

  காரைக்காலுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.2 கோடி ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது. இடைக்கால நிவாரணமாக மத்திய அரசு புதுவைக்கு ரூ.200 கோடி தருமாறு கேட்டுள்ளோம். 

  காரைக்காலில் மாவட்ட நிர்வாகம், பல்வேறு அரசுத்துறைகள் ஒருங்கிணைந்து கரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டுள்ளது. அனைத்து அரசுத்துறையினருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக அவர் கூறினார்.

  முன்னதாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணராவ், எம்.கந்தசாமி, ஆர்.கமலக்கண்ணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கீதாஆனந்தன், பி.ஆர்.என்.திருமுருகன், கே.ஏ.யு.அசனா, ஜெயமூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா உள்ளிட்டோரும், அரசுத்துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai