கோடைகால பருத்தி சாகுபடியை ஊக்குவிக்க விவசாயிகள் கோரிக்கை

கோடைகால பருத்தி சாகுபடிக்கு  காப்பீட்டு திட்டத்தை அறிவித்து விவசாயிகளை ஊக்கப்படுத்த வேளாண் துறை முன் வர வேண்டும் என தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
கோடைகால பருத்தி சாகுபடியை ஊக்குவிக்க விவசாயிகள் கோரிக்கை

சிதம்பரம்: கோடைகால பருத்தி சாகுபடிக்கு  காப்பீட்டு திட்டத்தை அறிவித்து விவசாயிகளை ஊக்கப்படுத்த வேளாண் துறை முன் வர வேண்டும் என தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தமிழகத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. பெருமபாலான மக்கள் விவசாயத்தை குலத்தொழிலாகவும், சிலர் ஜீவாதாரன தொழிலாகவும் செய்து வருகின்றனர்.  விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் தங்குதடையின்றி கிடைத்த காலகட்டங்களில் முப்போக தொழிலாக விவசாயம் நடைபெற்றது. கிடைக்கும் தண்ணீரை பொறுத்து ஆற்றுப்பாசனம், ஏரி பாசனம், கண்மாய் பாசணம்,கிணற்று பாசனம், ஆழ்குழாய் மோட்டார் பாசணம்  எனவும்  மழையைக்கொண்டு மாணாவாரி விவசாயமும் செய்யப்பட்டு வருகிறது. காலநிலை மாற்றம் காரணமாக பருவமழை தாமதமாக தொடங்குவதும், பருவமழை குறுகிய  கால அளவில் பெய்து விடுவதால் விவசாயம் செய்ய தேவையான தண்ணீர் கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவி விவசாயிகள் அவதிப்படுவது வழக்கம்.

தமிழகத்தை பொறுத்த மட்டில் உறுதியான பாசன பகுதியாக விளங்குவது காவிரி பாசன பகுதியாகும். பத்து மாவட்டங்களில் காவிரி நீர் பாசனத்தின் மூலம் நெல், கரும்பு, வாழை, மஞ்சள், காய்கறிகள், பழவகைகள், தாணியபயிர்கள், பயிறுவகை பயிர்கள், எண்ணை வித்து பயிர்கள், ஆகியவை விவசாயிகளால் பயிரிடப்படுகிறது. 

குறிப்பாக கிடைக்கும் தண்ணீரை அடிப்படையாக கொண்டு குறுகியகால பயிர், நீண்டகால பயிர் பணப்பயிர் என மக்களின் தேவைக்கேற்ப விவசாயிகள் தொடர்ந்து மூன்று போகம் சாகுபடி செய்து வந்த காவிரி பான பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு, மற்றும் பருவமழை பொய்த்து போனது போன்ற காரணங்களால்  மூன்றுபோக சாகுபடி - இரண்டு போகமாகவும், இரண்டு போக சாகுபடி ஒருபோகமாகவும், ஒருசில ஆண்டுகளில் ஓருபோக சாகுபடியும் உத்தரவாதம் இல்லாத நிலையில் தற்போது விவசாயம் நடைபெற்று வரும் இன்றைய சூழலில்  ஆழ்குழாய் அமைத்து இலவச மின் இனைப்பு பெற்று  மின் மோட்டார் மூலம் தண்ணீர் இறைத்து சாகுபடி செய்யும் விவசாயிகள் மட்டுமே தொடர்ந்து உறுதியான சாகுபடி செய்து வருகிறார்கள்.

மின் மோட்டார் மூலம் சாகுபடி செய்யும் விவசாயிகள் பாரம்பரியமாக மண்ணுக்கேற்ற பயிர்கள் மற்றும் இதர ரகங்களை தேர்வு செய்து சாகுபடி செய்யும் முறையிலிருந்து சமீப ஆண்டுகளாக முற்றிலும் விலகி புதிய பயிர்களை சாகுபடி செய்வது அதிகமாகி வருகிறது. குறிப்பாக காவிரி பாசன பகுதிகளில் குறுவை, சம்பா, நவரை என மூன்று போக  நெல் சாகுபடியும்,  சில இடங்களில் இரண்டு போக நெல் சாகுபடியும் அதனை தொடர்ந்து மூன்றாம் போகமாக பயிறு வகை பயிர்களை சாகுபடி செய்வது வழக்கம்.  நெல் சாகுபடியில்  ஊடுபயிராக உளுந்து மற்றும் பயிறு வகை பயிர்கள் சாகுபடி செய்து வந்த முறை மாறி  தற்போது புதிய பயிர்களை சாகுபடி செய்து அதன் மூலம் வருவாய் ஈட்ட விவசாயிகள் முனைப்பு காட்டி வருகின்றனர். 

ஏதேனும் ஒரு விவசாயி துனிச்சலுடன் ஏதேனும் தன் பகுதியில் பரிச்சயமில்லாத பயிரை சாகுபடி செய்து வெற்றி பெற்று வருவாய் ஈட்டி விட்டார் என அறிந்து படிப்படியாக பல விவசாயிகள் அதே முறையை கடைபிடித்து அப்பயிரை சாகுபடி செய்வது வழக்கம். அந்த வகையில் நாகை, தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கோடைகாலத்தில் கிடைக்கக்கூடிய தண்ணீரைக் கொண்டு வறட்சியை தாங்கி வளரக்கூடிய பருத்தியை  சாகுபடி செய்வது போல கடலூர் மாவட்ட காவிரி பாசன பகுதிகளிலும் விவசாயிகள் பருத்தியை ஆர்வமாக சாகுபடி செய்து வருகிறார்கள்.
 
இதுகுறித்து  காவிரி பாசன விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு சங்க பொதுச்செயலாளர் பெ.ரவீந்திரன் தெரிவிக்கையில் கடலூர் மாவட்ட காவிரி பாசன பகுதிகளான காட்டுமன்னார் கோயில் மற்றும் சிதம்பரம் ஆகிய வட்டங்களில் சம்பா நெல் சாகுபடிக்கு அடுத்து ஊடுபயிராக உளுந்து மற்றும் பயிறு வகைகளை சாகுபடி செய்வது பல ஆண்டுகளாக தொடர்ந்து கடைபிடிக்கப்படும் வழக்கம். நெல் அறுவடையின் போது இயந்திரங்களை பயன்படுத்துவதால் பயிறு வகை செடிகள் அழிந்து போவது, பயிறுவகை பயிர்களின் அறுவடை காலங்களில்  ஆள்பற்றாக்குறை, கூடுதல் செலவு, இயந்திரங்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களால் பயிறுவகை பயிர்களுக்கு மாற்றாக பருத்தியை  பல விவசாயிகள்  விரும்பி சாகுபடி செய்து வருகின்றனர். 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னாள் கிராமத்திற்கு ஒரு சில விவசாயிகள் மட்டுமே சாகுபடி செய்து வந்த பருத்தி  தற்போது பெரும்பாலான விவசாயிகளால்  சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கோடை காலங்களில் நஞ்சை வயல்களில் எங்கோ ஒரு இடத்தில் மட்டுமே  பசுமை தெரியும். கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக பரவலாக பசுமை தெரியும் அளவிற்கு விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். குமராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெள்ளூர் , வெண்ணையூர், வாண்டாயார் இருப்பு ஆகிய கிராமங்களில் கிராமத்திற்கு தலா 200 ஏக்கர் வீதம்  பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதுபோல பல கிராமங்களில் கோடைகாலத்தில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

பருத்தி வறட்சி கால பயிராக இருந்தாலும் வெப்பத்தின் தாக்கம் ஓரளவே இருக்க வேண்டும். கோடை கால வெப்பத்தின் தாக்கத்தால் பூச்சி தாக்குதல் அதிகமாக ஏற்பட்டு விவசாயிகள் பூச்சுகளை கட்டுபடுத்த பூச்சுக்கொல்லி மருந்துகளுக்கு கூடுதல் செலவு செய்து பயிர்களை காப்பாற்றி வருகின்றனர். 

பருத்தி சாகுபடியில் அறுவடை துவக்க காலத்தில் தண்டு துளைப்பான் என்ற பூச்சியின் தாக்குதலால் பருத்தி செடியின் தண்டு பாதிக்கப்பட்டு செடிகள் காய்ந்து விடும்.  காய்ந்து போன செடியில் உள்ள பஞ்சுகள் தரம் குறைந்து வீசும் காற்றில் பறந்து சாகுபடியில் பெரும் நட்டத்தை உண்டாக்கிவிடும். இது போன்ற நட்டத்திலிருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள விவசாயிகள் பெரும் அளவில் பணத்தையும், உழைப்பையும் செலவிட வேண்டியுள்ளது. 

தங்களது குடும்ப முன்னேற்றத்திற்கு  தேவையான பொருளாதாரத்தை உருவாக்க விவசாயிகள் தங்களிடம் ஆழ்குழாய் கிணறு, மின் இனைப்பு, மின் மோட்டார், நிலத்தடி நீர்  ஆகிய வசதிகள் இருப்பதால்  நிலத்தை கரம்பாக போட மனமில்லாமல் இஷ்டப்பட்டு செய்யும் விவசாயம் கஷ்டப்படும் நிலையை உருவாக்கிவிடுகிறது. இது போன்ற கஷ்டங்களை கடந்து விவசாயிகளை காப்பாற்ற செயல்படுத்துப்படும்  காப்பீட்டு திட்டம் புதிதாக சாகுபடி செய்யும் பயிர்களுக்கு நடைமுறை படுத்தாதது வருத்தத்திற்குறியது.

நாட்டுமக்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக வேளாண் விளைபொருளை உற்பத்தி செய்ய விவசாயிகள் ஆர்வத்துடன் செயல்படுகிறார்கள். விதைப்பு முதல் விற்பனை வரை விவசாயிகளுக்கு துணையாக  நின்று  ஊக்கப்படுத்தும், மாநில அரசு பல திட்டங்களை அறிவித்து அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் மாவட்ட அளவிலான வேளாண்துறை விவசாயிகளை அலச்சியப்படுத்தும் விதமாக மெத்தனமாக  செயல்படுவது  வேதனைக்குறியது. 

கடலூர் மாவட்டத்தில் மங்களூர் மற்றும் நல்லூர் ஒன்றியங்களில் மட்டுமே பருத்தி சாகுபடி முழு அளவில் நடைபெற்று வருகிறது. மேலும் சாகுபடியை ஊக்குவிக்கும் விதமாக பலனளிக்ககூடிய திட்டங்கள் மற்றும் பயிர் காப்பீட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.  காவிரி பாசன பகுதிகளில் விருப்பத்துடன் கோடைகால பருத்தியை  சாகுபடி செய்யும் நிலங்களை பார்வையிட்டு விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக பருத்தி சாகுபடிக்கான  பயிர்காப்பீடு உள்ளிட்ட   திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்கிறார் காவிரி பாசன விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு சங்க பொதுச்செயலாளர் பெ.ரவீந்திரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com