நெல்லையில் விவசாயிகளுக்கு லாபத்தால் இனிக்காத கோடை மாம்பழங்கள்!

கரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் வகையில் பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை மாம்பழ சீசனில் பழங்கள் 
நெல்லையில் விவசாயிகளுக்கு லாபத்தால் இனிக்காத கோடை மாம்பழங்கள்!


திருநெல்வேலி: கரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் வகையில் பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை மாம்பழ சீசனில் பழங்கள் வரத்து அதிகரித்தாலும் விற்பனை மந்தமாகியுள்ளது. இதனால் விவசாயிகள் போதிய விலை கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். 

கோடைகாலத்தில் வரும் பழ வகைகளில் தர்பூசணிக்கு அடுத்தப்படியாக மாம்பழங்கள் உள்ளன. கோடை மாம்பழங்கள் மிகவும் சுவை மிகுந்தவை. ஆண்டுதோறும் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் கோடை மாம்பழ சீசன் ஆகஸ்ட் மாதம் முடிவது வரை நீடிக்கும். திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேற்குத்தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் மாமரங்கள் அதிகளவில் உள்ளன.

செங்கோட்டை, தென்காசி, கடையம், ஆழ்வார்குறிச்சி, களக்காடு ஆகிய பகுதிகளில் மாங்காய் உற்பத்தி அதிகம். இம் மாவட்டத்தில் மொத்தம் 6,200 ஹெக்டேர் பரப்பளவில் மாமரத் தோட்டங்கள் உள்ளன. செந்தூரம், நீலம், பெங்களூரா, பங்கனப்பள்ளி, அல்போன்சா, இமாம்பசந்த் ஆகிய ரகங்கள் பயிரிடப்படுகிறது. இவற்றில் கோடை சீசனில் முதலில் செந்தூரமும், பங்கனப்பள்ளியும் விற்பனைக்கு வரும். இறுதியாகதான் நீலம் வகை விற்பனைக்கு வரும். அதன்படி இப்போது செந்தூரம் ரக மாம்பழம் கிலோ ரூ.70-க்கும், அல்போன்சா ரகம் கிலோ ரூ.60-க்கும் விற்பனைக்கு வந்துள்ளன.

அறுவடை தீவிரம்: இதுகுறித்து விவசாயிகள் கூறியது: தமிழகத்தில் தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்கள்தான் மாம்பழ உற்பத்தியில் முன்னணியில் உள்ளன. ஆனால், அனைத்து ரக மாமரங்களும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ளன. ஆண்டுதோறும் சராசரியாக 15 ஆயிரம் டன் மாம்பழங்கள் உற்பத்தியாகின்றன. அனைத்துப் பகுதிகளிலும் கோடைக்கு பின்பு மாங்காய்கள் கிடைப்பது இல்லை. திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மட்டும் அக்டோபர், நவம்பர் மாதங்களிலும் மாங்காய்கள் கிடைக்கின்றன. இந்தப் பருவத்தில் பழமாக மாற்றாமல் காயாக தமிழகத்தின் அனைத்து சந்தைகளுக்கும் வியாபாரிகள் அனுப்புகிறார்கள். கோடை மாம்பழ சீசனை காட்டிலும் இந்த இடைப்பருவ காய்ப்பின்போது வருவாய் அதிகம் கிடைத்து வருகிறது. இது இந்த மூன்று மாவட்ட மா விவசாயிகளுக்கு கிடைத்துள்ள தனித்தன்மை. 

2019 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்ததால் நிகழாண்டில் கோடை மாங்காய் மகசூல் நன்றாக உள்ளது. மாங்காய் அறுவடைப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என்றனர்.

கரோனாவால் பாதிப்பு: கங்கனான்குளம் பகுதியைச் சேர்ந்த மாந்தோட்ட விவசாயி கூறியது: திருநெல்வேலி, தென்காசி மாவட்ட தோட்டப்பயிர்களில் மா, தென்னை ஆகியவை முன்னணியில் உள்ளன. இப்போது கோடை மாங்காய் அறுவடை தொடங்கியுள்ள நிலையில் கரோனா வைரஸ் பொதுமுடக்கம் காரணமாக போதிய விலை கிடைக்காத சூழல் உள்ளது. கிளிமூக்கு வரை மாங்காய்கள் வழக்கமாக கிலோ ரூ.10 முதல் ரூ.25 வரை கொள்முதல் செய்யப்படும். ஆண்டுதோறும் விலைவாசி உயர்ந்து வரும் சூழலில் நிகழாண்டில் ரூ.20-க்கு மட்டுமே கிளிமூக்கு மாங்காய்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. பொதுமுடக்கத்தால் வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்ல வாய்ப்பிருந்தாலும், மொத்த வியாபாரிகள் அதிக செலவு காரணமாக அஞ்சுகிறார்கள். ஆகவே, விவசாயிகளிடம் கொள்முதல் விலையைக் குறைப்பதிலேயே குறியாக உள்ளனர். 

மேலும், கரோனா வைரஸின் அறிகுறியாக சளி, இருமல் இருப்பதால் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு மாம்பழங்கள் கொடுப்பதை மக்கள் முற்றிலும் தவிர்க்கத் தொடங்கியுள்ளனர். அதனால் விற்பனை மிகவும் சரிந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மாந்தோட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. மாம்பழங்களை நேரடியாக சந்தைப்படுத்த விவசாயிகளுக்கு சிறப்பு சந்தைகள் இல்லை. அதனால் பெரும்பாலும் குத்தகைத்தாரர்களிடம் மரங்களை கொடுக்கும் பழக்கமே உள்ளது. இதனால் அதிக விளைச்சல் கண்டாலும் குறைந்தபட்ச வருவாயை மட்டுமே விவசாயிகள் பெற்று வருகிறார்கள். 

இதைத்தடுக்க தோட்டக்கலைத் துறையினர் ஏற்றுமதி மையங்களை அமைக்கலாம். தாமிரவருணி நதியின் கரையோரம் மாம்பழக்கூழ் ஆலைகளை ஏற்படுத்தவும், புதிய திட்டங்களின் மூலம் மாமர நடவுப்பணிகளை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை அரசு தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com