திருப்பூரில் இருந்து பிகாருக்கு 1,140 தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலமாக இன்று அனுப்பி வைப்பு
By DIN | Published On : 10th May 2020 10:26 AM | Last Updated : 10th May 2020 10:26 AM | அ+அ அ- |

திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றி வந்த பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 1,140 பேர் சிறப்பு ரயில் மூலமாக ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.
திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் பிகார், அஸ்லாம், ஒடிசா, மேற்கு வங்கம், உத்தரப் பிரேதசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றிவந்தனர்.
இந்த நிலையில், பொதுமுடக்கம் காரணமாக 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று விட்டனர். இதனிடையே, பொது முடக்கம் காரணமாக வேலை இல்லாததால் 2 லட்சம் தொழிலாளர்கள் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தவித்து வருகின்றனர். மேலும், சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கக்கோரி நாள்தோறும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக திருப்பூரின் பல்வேறு இடங்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்னையும் ஏற்பட்டு வருகிறது. சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்கள் குறித்து வருவாய்த்துறையினரும், காவல் துறையினரும் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், திருப்பூரில் இருந்து பிகார் மாநிலம் முசாப்பார்பூருக்கு சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படவுள்ளது. இதில், 1,140 தொழிலாளர்கள் அனுப்பிவைக்கப்படவுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.