பாபநாசம் மலையடிவாரத்தில் 52 நாள்களில் பிடிபட்ட 6 ஆவது சிறுத்தை: அச்சத்தில் மக்கள்

பாபநாசம் மலையடிவாரப் பகுதியில் 52 நாள்களில் அடுத்தடுத்து 6 சிறுத்தைகள்  பிடிபட்டதையடுத்து அந்தப் பகுதி மக்கள் மீளாத அச்சத்தில் உள்ளனர்.
பாபநாசம் மலையடிவாரத்தில் 52 நாள்களில் பிடிபட்ட 6 ஆவது சிறுத்தை: அச்சத்தில் மக்கள்

அம்பாசமுத்திரம்: பாபநாசம் மலையடிவாரப் பகுதியில் 52 நாள்களில் அடுத்தடுத்து 6 சிறுத்தைகள்  பிடிபட்டதையடுத்து அந்தப் பகுதி மக்கள் மீளாத அச்சத்தில் உள்ளனர்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம் பாபநாசம் வனச்சரகப் பகுதியில் மலையடிவாரத்தில் உள்ள கோரையார்குளம், வேம்பையாபுரம் மற்றும் செட்டிமேடு ஆகிய பகுதிகளில் வனப்பகுதியிலிருந்து வெளிவரும் சிறுத்தைகள் கடந்த சில மாதங்களாக நாய், ஆடு உள்ளிட்டவற்றைத்  தாக்கித் தூக்கிச் சென்றன. இது குறித்து பொது மக்கள் புகாரளித்ததையடுத்து வனத்துறையினர் சிறுத்தையைப் பிடிக்க கூண்டு வைத்தனர்.

இதில் மார்ச் 24, ஏப். 12, ஏப். 26, மே 1, மே 12 ஆகிய நாள்களில் ஐந்து சிறுத்தைகள் சிக்கின. 

இந்நிலையில், தொடர்ந்து அந்தப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததையடுத்து மீண்டும் அதேப் பகுதியில் வனத்துறையினர் மே 13 ஆம் தேதி சிறுத்தையைப் பிடிக்க கூண்டு வைத்தனர். 

இதில் மே 15 தேதி வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணியளவில் சுமார் ஒன்றரை வயதுள்ள பெண் சிறுத்தை கூண்டில் சிக்கியது. 

கூண்டில் சிக்கிய சிறுத்தையை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக கள இயக்குநர் கயாரத் மோகன் தாஸ் அறிவுரையின் பேரில், அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநர் (பொ) கணேசன் தலைமையில் களக்காடு வனச்சரகத்திற்குள் பட்ட மேல் கோதையாறு வனப்பகுதியில் கொண்டுவிட்டனர்.

ஒரே கிராமத்தில் தொடர்ந்து 52 நாள்களில் 6 சிறுத்தைகள் அடுத்தடுத்து பிடிபட்டுள்ளது அந்தப் பகுதி மக்களிடையே மனதளவில் மீளாத அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதுவரை பிடிப்பட்ட ஆறு சிறுத்தைகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்ததா இல்லை வனப்பகுதியில் விடப்படும் சிறுத்தை மீண்டும் மீண்டும் வருகிறதா என்பது குறித்து முடிவெடுக்க முடியாத குழப்பத்தில் உள்ளதாகவும், தொடர்ந்து கண்காணிப்பதன் மூலமே முடிவு செய்ய முடியும் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேம்பையாபுரம் பகுதியில் மேலும் சிறுத்தைகள் இருப்பதாக அந்தப் பகுதி மக்கள் அச்சம் தெரிவித்தனர்.

சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் கிராமத்திற்குள் நுழைவதைத் தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இங்கு பிடிக்கப்படும் சிறுத்தைகளுக்கு ஜிபிஎஸ் கருவியைப் பொறுத்தி அனுப்புவதன் மூலம் ஒரே சிறுத்தை மீண்டும் மீண்டும் வருகிறதா என்பதை அறிந்து கொள்வதோடு சிறுத்தைகளின் எண்ணிக்கையை அறிந்து கொள்ளவும் முடியும் என்று வன விலங்கு ஆர்வலர்கள் கூறினர்.

மீண்டும் சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் ஊருக்குள் நுழையாமல் தடுக்க உரிய நடவடிக்கை  விரைந்து எடுக்க வேண்டும் என்று செட்டிமேடு, வேம்பையாபுரம், கோரையாறு குளம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com