கடையை எப்ப சார் திறப்பீங்க? செருப்பை வட்டத்தில் வைத்துக் காத்திருந்த குடிப் பழக்கத்தினர்

 திருச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளின் முன் கடைகள் திறப்பதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பாகவே வந்து இடம் பிடித்து மது அருந்துவற்காகக் குடிப் பழக்கத்தினர் காத்திருந்தனர்.
கடையை எப்ப சார் திறப்பீங்க? செருப்பை வட்டத்தில் வைத்துக் காத்திருந்த குடிப் பழக்கத்தினர்


திருச்சி:  திருச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளின் முன் கடைகள் திறப்பதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பாகவே வந்து இடம் பிடித்து மது அருந்துவற்காகக் குடிப் பழக்கத்தினர் காத்திருந்தனர்.

திருச்சி மாநகராட்சிப் பகுதியில் 71 மதுக்கடைகளும், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊரகப் பகுதிகளில் 112 மதுக்கடைகளும் உள்ளன. இவற்றில் கரோனா பாதிப்புள்ள பகுதிகளாக தடைசெய்யப்பட்டிருந்த பகுதிகளில் அமைந்துள்ள 20 கடைகளைத் தவிர்த்து,  இதர 163 கடைகளும் கடந்த மே 7ஆம் தேதி திறக்கப்பட்டு இரண்டு நாள் விற்பனை நடைபெற்றது. பின்னர், நீதிமன்ற உத்தரவால் மூடி சீல் வைக்கப்பட்டன. இப்போது, மீண்டும் உச்ச நீதிமன்ற உத்தரவால் சனிக்கிழமை திறக்கப்பட்டுள்ளன. 163 கடைகளிலும் தலா 4 முதல் 10 காவலர்கள் வரை கூட்ட நெரிசலுக்கு ஏற்ப பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.

திருச்சி புத்தூர் நான்கு சாலை பகுதியில் உள்ள மதுக்கடைகள் முன்பாக சமூக இடைவெளி குறியீடாக வரையப்பட்டிருந்த வட்டங்களில் காலணிகள், தேங்காய் சிரட்டை, கற்கள், ஒத்த செருப்பு, மரக் கட்டைகள் என கிடைத்த பொருள்களை எடுத்து வைத்து இடம் பிடித்தனர். 2 மணிநேரத்துக்கு முன்பே வந்திருந்தவர்கள் தாங்கள் வைத்திருந்த பொருள்கள் அதே இடத்தில் உள்ளதா என்பதை கண்காணிக்க சாலையோரம் பூட்டப்பட்டிருந்த கடைகளுக்கு முன் நிழலில் அமர்ந்து கண் இமைக்காமல், கடமை தவறாது கண்காணித்து வந்தனர். சிலர் மதுக்கடை வாசலில் வரிசையாக அமர்ந்திருந்தனர்.

இதேபோல, மத்தியப் பேருந்து நிலையம், ஜங்ஷன், உறையூர், தென்னூர், பாலக்கரை, மரக்கடை, சத்திரம் பேருந்துநிலையம், பொன்மலை, அரியமங்கலம், கோ.அபிஷேகபுரம், திருவானைக்கா, திருவரங்கம் உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் கடை திறப்பதற்கு முன்பாகவே பலரும் வந்திருந்து காத்திருந்ததைக் காண முடிந்தது. இந்த காட்சிகளை காணும்போது தமிழ் சினிமாவில் வரும் நையாண்டி போல, கடையை எப்ப சார் திறப்பீங்க என்ற வடிவேலுவின் குரல்தான் அனைவரது மனதுக்குள்ளும் ஒலித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com