சொந்த ஊர்களுக்குத் திரும்பும் வெளிமாநிலத் தொழிலாளர்களின் நிலை: உயர்நீதிமன்றம் கருத்து

சொந்த ஊர்களுக்குத் திரும்பும் வெளிமாநிலத் தொழிலாளர்களின் நிலை: உயர்நீதிமன்றம் கருத்து

பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள வெளிமாநில தொழிலாளர்களின் நிலையை ஊடகங்களில் காணும் எவராலும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாது என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை: பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள வெளிமாநில தொழிலாளர்களின் நிலையை ஊடகங்களில் காணும் எவராலும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாது என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் ஏ.பி.சூரியபிரகாசம் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், மகராஷ்டிரத்தில் உள்ள சங்லி மாவட்டத்தில் உள்ள குப்வாட் கிராமத்தில் கணேசன் என்பவர் உள்ளிட்ட 400 க்கும் மேற்பட்ட தமிழர்கள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
தமிழகத்தில் இருந்து மகராஷ்டிரத்துக்கு வாழ்வாதாரத்துக்காகச் சென்ற தமிழர்கள் பொதுமுடக்கத்தால் தமிழகம் திரும்ப முடியவில்லை. தமிழகத்துக்கு அவர்கள் செல்ல வேண்டுமெனில் தலா ரூ.3500 வழங்க வேண்டும் மகராஷ்டிரா அரசு அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக, அங்கு சிக்கித் தவிக்கும் தமிழர்கள் பேட்டியளித்துள்ளனர். மனிதாபம் இல்லாமல் ஏழை தமிழர்களை அடைத்து வைத்திருப்பது அவர்களது உயிர்வாழும் உரிமையை பறிக்கும் செயலாகும். எனவே மகராஷ்டிரத்தில்சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.  இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன்,  ஆர்.ஹேமலதா ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்தையும், தமிழக தலைமைச் செயலாளரையும் எதிர்மனுதாரராகச் சேர்த்து உத்தரவிட்டனர். பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள வெளிமாநில தொழிலாளர்களின் நிலையை ஊடகங்களில் காணும் எவராலும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாது என கருத்து தெரிவித்தனர்.மேலும், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு? ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர்?

மத்திய அரசும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் அவர்களுக்கு என்ன உதவிகள் வழங்கியுள்ளன? சொந்த ஊர் திரும்பும் வழியில் எத்தனை தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர்? அவர்களின் குடும்பத்தினருக்கு என்ன நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி, மத்திய மாநில அரசுகள் விரிவான பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் மே 22- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com