சப்தமின்றி கல்விச் சேவை செய்யும் தலைமை ஆசிரியர்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஏழை அரசுப் பள்ளி மாணவ மாணவியருக்கு கடந்த 16 ஆண்டுகளாக பல லட்சம் மதிப்பிலான
சப்தமின்றி கல்விச் சேவை செய்யும் தலைமை ஆசிரியர்


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஏழை அரசுப் பள்ளி மாணவ மாணவியருக்கு கடந்த 16 ஆண்டுகளாக பல லட்சம் மதிப்பிலான குறிப்பேடுகளை தொடர்ந்து வழங்கி சப்தமின்றி  கல்விச் சேவையாற்றி வருகிறார் தலைமை ஆசிரியர் கோ.ஜெயக்குமார் ஞானராஜ்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்  பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் கோ.ஜெயக்குமார் ஞானராஜ். இவர் ஆண்டு தோறும் அரசுப் பள்ளியில் படிக்கும் அனைத்து தரப்பு மாணவ மாணவியரின் பயன்பாட்டிற்கான பல லட்சம் மதிப்புள்ள குறிப்பேடுகளை (டைரி) இலவசமாக வழங்கி வருகிறார்.

இது குறித்து தலைமை ஆசிரியர் கூறியதாவது: 2004 ஆம் ஆண்டு முதல், எனது நண்பர் ஒருவர் மூலம் இந்த டைரிகளை இலவசமாகப் பெற்று இப் பகுதி மட்டும் இல்லாமல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆண்டுதோறும் பல ஆயிரக்கணக்கான ஏழை மாணவ மாணவியர் பயன்பெற்று வருகிறார்கள். மாணவர்கள் இந்த டைரிகளை வீணடித்துவிடாமல் இருக்க மிகுந்த கவனத்துடன் இவை வழங்கப்படுகிறது. 

பள்ளிகளில் மாணவர்கள் இதனைப் பயன்படுத்திய பின்னர் ஆசிரியர்களிடம் முழு டைரியும் பயன்படுத்தி முடிக்கப்பட்டதை காட்டி, உறுதி செய்த பின்னர் புதிய டைரி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு மாணவர்களுக்கு பேனா மற்றும் பவுச் டைரியுடன் சேர்ந்து இலவசமாக வழங்கப்படுகிறது என்றார் அவர்.

வியாழக்கிழமை இந்த ஆண்டிற்கான இலவச டைரி, பேனா மற்றும் பவுச் பள்ளிகளுக்கும் வழங்கும் நிகழ்ச்சியை ஸ்ரீவில்லிபுத்தூரில், விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை) வீ.வீரபாண்டிராஜ் தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: கிராமப்புறங்களில் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளின் ஆசிரியர்கள் தொடர்ந்து இந்த டைரிகளை பெற்று இலவசமாக வழங்குவதால், அரசுப் பள்ளிகளுக்கு மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கிறது.

ஏழை மாணவர்கள் குறிப்பேடுகள் வாங்குவதற்கு போதுமான வசதியில்லாத நேரத்தில் இந்த டைரி அவர்களுக்கு வீட்டுப் பாடங்கள் எழுத, வகுப்பில் வைக்கும் தேர்வுகளை எழுத மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. விடுமுறை நாட்களிலும் சமூக அக்கறையுடன் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ் செய்து வரும் சேவை பாராட்டுக்குரியது என்றார் அவர்.

முன்னதாக கொங்கலாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆங்கில பட்டதாரி ஆசிரியர் பெ.ஜெயக்குமார், சோமையாபுரம் சி.எஸ்.ஐ. தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை பிரைட்டிசிங், அக்கரைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் ஜி.எட்வின் பாஸ்கர் ஆகியோரிடம் அவர்களது பள்ளிக்கான டைரிகள், பேனா மற்றும் பவுச்சை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடன் நேர்முக உதவியாளர் (மேல்நிலை) வீ.வீரபாண்டிராஜ் வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com