தம்மம்பட்டியில் கரோனா தடை உத்தரவை காரணம் காட்டி கொள்ளை லாபம் அடிக்கும் வியாபார நிறுவனங்கள்!

தம்மம்பட்டியில், கரோனா ஊரடங்கு தடை உத்தரவை காரணம் காட்டி, சில கடை வியாபாரிகள், சில தனியார் நிறுவனங்கள், கூடுதல் விலை
தம்மம்பட்டியில் கரோனா தடை உத்தரவை காரணம் காட்டி கொள்ளை லாபம் அடிக்கும் வியாபார நிறுவனங்கள்!

தம்மம்பட்டி: தம்மம்பட்டியில், கரோனா ஊரடங்கு தடை உத்தரவை காரணம் காட்டி, சில கடை வியாபாரிகள், சில தனியார் நிறுவனங்கள், கூடுதல் விலை வைத்து, வாடிக்கையாளர்களிடம் கொள்ளை லாபம் அடித்து வருவதாக  பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தமிழகத்தில் தடை உத்தரவு, வரும் மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கை தளர்த்தி, சில கடைகள், தனியார் நிறுவனங்கள் செயல்படலாம் என, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.  அதன்படி, தம்மம்பட்டி  பகுதியில், அரசு  அனுமதியின்படி, பல கடைகள், நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், தடை உத்தரவுக்கு முன் விற்கப்பட்ட விலைகளை விட, தற்போது, கரோனா தடை உத்தரவால், விலை உயர்ந்துள்ளது என, பல மடங்கு கூடுதல் விலைக்கு பொருள்களை விற்று, சில வியாபாரிகள், தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிப்பதாக, தம்மம்பட்டி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து, பொதுமக்கள் கூறும் போது, இங்குள்ள சில டிப்பார்ட்மென்ட் ஸ்டோர்கள், மளிகை கடைகளில் விற்கப்படும் பொருட்களின் விலையை, முன்பை விட, கூடுதல் விலை வைத்துதான் விற்கின்றனர்.  அதிலும் சில, டிப்பார்ட்மென்ட் ஸ்டோர்களில், பாக்கெட்களில், விலை ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கரை கிழித்துவிட்டே விற்கின்றனர். சில மளிகை கடைகளில், அதிகப்பட்ச சில்லறை விலை( எம்.ஆர்.பி).  27 ரூபாய் உள்ள, அரை கிலோ ரவை பாக்கெட்டை, 40 ரூபாய்க்கு விற்கின்றனர். கட்டுமான பொருள்கள் விற்பனை செய்யும் சிமெண்ட், ஸ்டீல்ஸ்  நிறுவனங்கள், கடைகள், சிமெண்ட் மூட்டை ஒன்றுக்கு, 100 ரூபாய் வரை கூடுதல் விலை வைத்து விற்கின்றனர். 

இதேபோல, இரும்பு கம்பிகள்,  தடுப்பு வேலி அமைக்கப் பயன்படும், செயின் லாக் கம்பி வலை, சிமெண்ட் தூண்கள் உள்ளிட்ட பல பொருள்களில் கொள்ளை லாபம் வைத்து விற்கின்றனர். வியாபாரிகள், கடைக்காரர்கள் தாங்கள், பொருள்களை கூடுதல் விலைக்கு விற்கும் சூழ்நிலைக்கு, கரோனா தடையையும், கூடுதல் செலவு போக்குவரத்தையும்  காரணம் காட்டுகிறார்கள். தவிர, தம்மம்பட்டியில் விற்பனை வரிக்கான பில் போட்டு வியாபாரம் செய்யும் பெரும்பாலான தனியார் நிறுவனங்கள், மற்றும் கடைகளில் விற்கும் பொருள்களுக்கு உரிய கேஷ் பில்களை, வாடிக்கையாளர்களுக்கு தருவதில்லை. சில தினங்களுக்கு முன், கூடுதல் விலைக்கு உரம் விற்கப்படுவதாக கூறப்பட்ட புகாரை அடுத்து, தம்மம்பட்டியில் உள்ள உரக்கடைகளில், அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர்.  

இதுபோல, விற்பனை விலைக்கான உரிய பில் தராமல், அரசையும், வாடிக்கையாளர்களையும், ஏய்த்துப் பிழைக்கும் நிறுவனங்கள் மற்றும் கடைகளிலும் வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com