பயனற்றுப்போன சொட்டுநீர் பாசன நெகிழிக் குழாய்: கட்டில் முடைந்து பயன்படுத்தும் பெண் விவசாயி

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பயற்றுப்போன சொட்டுநீர் பாசன நெகிழிக் குழாய்களை காயலான் கடையில் விற்பனை செய்யாமல்,
விவசாயி லட்சுமி
விவசாயி லட்சுமி


வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பயற்றுப்போன சொட்டுநீர் பாசன நெகிழிக் குழாய்களை காயலான் கடையில் விற்பனை செய்யாமல், மறுசுழற்சி பயன்பாட்டு நோக்கோடு, கட்டில் முடைந்து பெண் விவசாயி ஒருவர் பயன்படுத்தி வருகிறார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு ஆறு, ஏரி, அணை நீர்பாசன திட்டங்கள் ஏதுமில்லை. பெரும்பாலான விவசாயிகளில் கிணற்றுப் பாசனமுறையிலேயே சாகுபடி செய்து வருகின்றனர்.

தொடர்ந்து வரும் வறட்சியால் நிலத்தடி நீர்மட்டம் சரிந்து வரும் நிலையில், வரப்பு வாய்க்கால் பாசனமுறைக்கு போதிய தண்ணீர் கிடைக்காததால், குறைந்த தண்ணீரை பயன்படுத்தி அதிக பரப்பளவிற்கு பாய்ச்சி மகசூல் பெறுவதற்கு சொட்டு நீர், தெளிப்பு நீர் ஆகிய நுண்நீர் பாசன முறையை பின்பற்றி வருகின்றனர்.

குறைந்தபட்சம் 50 சதம் முதல் 100 சதம் வரை அரசு மான்யத்தில் நுண்நீர் பாசனம் அமைத்துக் கொடுக்கப்படுவதால், பெரும்பாலான விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ், விளைநிலங்களில் சொட்டு பாசனத்திற்கு நெகிழிக்குழாய்களை பதித்துள்ளனர். 7 ஆண்டுகளுக்கு மேல் இந்த நெகிழிக்குழாய்கள் பயனற்றுப் போய்விடுவதால், இவற்றை அப்புறப்படுத்தும் விவசாயிகள், மீண்டும் வேளாண்த்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை வாயிலாக புதிய குழாய்களை வாங்கி பதித்துக் கொள்கின்றனர்.

பயனற்றுப்போன சொட்டுநீர் பாசன நெகிழிக் குழாய்களை பயன்படுத்தி பெண் விவசாயி முடைந்துள்ள கட்டில்.

பயனற்றுப்போன சொட்டுநீர் பாசன நெகிழிக்குழாய்களை, காயலான் கடைக்கு எடைபோட்டு விற்பனை செய்து விடுகின்றனர்.

ஆனால், சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி புதுப்பட்டி மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த பெண் விவசாயி லட்சுமி(42) என்பவர், பயனற்றுப்போன சொட்டுநீர் பாசன நெகிழிக் குழாய்களை காயலான் கடைக்கு அனுப்பாமல், மாற்றியோசித்து அவற்றை கயிற்று பதிலாக கட்டிலில் முடைந்து பயன்படுத்தி வருகின்றனர்.

பயனற்றுப்போன சொட்டுநீர் பாசன நெகிழிக்குழாய்களை பயன்படுத்தி, மறுசுழற்சி நோக்கோடு, பெண் விவசாயி முடைந்துள்ள கட்டிலை வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளும், விவசாயிகளும் பார்வையிட்டு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பெண் விவசாயி லட்சுமி தெரிவித்ததாவது:
எங்களது விளைநிலத்தில் சொட்டு நீர் பானத்திற்கு பதிக்கப்பட்ட நெகிழிக்குழாய்கள் பழுதடைந்ததால் அவற்றை அகற்றிவிட்டோம். பயனற்றுப் போன இந்த நெகிழிக்குழாய்களை எடைக்கு விற்பனை செய்யாமல், இரண்டு கட்டிலில் முடைந்துள்ளேன். கயிற்று கட்டிலை விட இந்த நெகிழிக்குழாய் கட்டில் உறுதியாக உள்ளது. எளிதில் தளர்ந்து போவதற்கும் வாய்ப்பில்லை. மற்ற விவசாயிகளும் இதுபோன்று பல்வேறு பயன்பாட்டிற்கு இந்த நெகிழிக்குழாய்களை முடைந்து பயன்படுத்த முயற்சிக்கலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com