விவசாயிகள் வயலில் இறங்கி பட்டை நாமத்துடன் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் அருகே கண்டியூரில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் உரிய நேரத்தில் இழப்பீடு வழங்கப்படாததைக் கண்டித்து, விவசாயிகள் சனிக்கிழமை
விவசாயிகள் வயலில் இறங்கி பட்டை நாமத்துடன் ஆர்ப்பாட்டம்


தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே கண்டியூரில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் உரிய நேரத்தில் இழப்பீடு வழங்கப்படாததைக் கண்டித்து, விவசாயிகள் சனிக்கிழமை வயலில் இறங்கி பட்டை நாமத்துடன் கூடிய படங்களை ஏந்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கச் செயலர் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் துணைச் செயலர் திருப்பூந்துருத்தி பி. சுகுமாரன் மற்றும் விவசாயிகள் கையில் பட்டை நாமம் வரையப்பட்ட படங்களையும், பதாகைகளையும் ஏந்தி முழக்கங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து விமல்நாதன் தெரிவித்தது:
பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் கடந்த 2016, 2017, 2018 -ஆம் ஆண்டுகளில் முழுமையான வெளிப்படைத்தன்மை இல்லை. பெரும்பாலான தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு முழுமையான இழப்பீட்டுத் தொகை வழங்குவதில் சமரச பஞ்சாயத்து செய்யும் நிலை உள்ளது.  

பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்குவதில் நடைபெறும் முறைகேடுகளைக் கூட்டுறவுத் துறைப் பதிவாளர், இணைப் பதிவாளர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டவர்களின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை பெற்றவர்களின் பெயர், முகவரி, புல எண்கள் பாதிப்பின் சதவீதம் ஆகியவற்றை இணையதளத்தில் வெளியிடுமாறு தொடர்ந்து முறையிட்டும், வெளிப்படைத்தன்மை இல்லை. 

இத்திட்டத்தில் நிகழ்ந்த அனைத்து முறைகேடுகள் குறித்து தமிழக ஆளுநரிடம் 2019, ஜன. 2-ஆம் தேதி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 2019, 2020 -ஆம் ஆண்டுகளில் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய காலத்துக்குள் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. இதை உடனடியாக வட்டியுடன் வழங்க வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளாக வாழை, சோளம் உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்களுக்குக் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. அதனால், இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம் என்றார் விமல்நாதன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com