துணை முதல்வர் நியமனம் பாஜகவின் முடிவு: நிதீஷ் குமார்
By ANI | Published On : 16th November 2020 07:36 PM | Last Updated : 16th November 2020 07:36 PM | அ+அ அ- |

நிதிஷ் குமார் (கோப்புப்படம்)
சுஷில் மோடியை துணை முதல்வராக நியமிக்காதது பாஜக எடுத்த முடிவு என பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பிகாரில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. இந்தக் கூட்டணியில் பாஜக அதிக இடங்களில் வென்றிருந்த போதிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியால் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதீஷ் குமாரே முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் பிகார் தலைநகர் பாட்னாவில் நிதீஷ் குமார் முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். கடந்த முறை துணை முதல்வராக இருந்த சுஷில் மோடிக்கு பதிலாக பாஜகவைச் சேர்ந்த தர்கிஷோர் பிரசாத் மற்றும் ரேணு தேவி ஆகியோர் துணை முதல்வர்களாப் பதவியேற்றுக் கொண்டனர்.
பதவியேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய நிதீஷ் கூறியதாவது,
“பொதுமக்கள் எடுத்த முடிவின்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம்.
மேலும், சுஷில் மோடியை துணை முதல்வராக தேர்வு நியமிக்காதது பாஜகவின் முடிவு. இது குறித்து பாஜகவிடம் தான் கேட்கப்பட வேண்டும்.” என தெரிவித்தார்.