இருசக்கர வாகனம் மீது வேன் மோதி இளைஞர் பலி
By DIN | Published On : 23rd November 2020 09:07 PM | Last Updated : 23rd November 2020 09:07 PM | அ+அ அ- |

விபத்தில் உயிரிழந்த இளைஞர் மற்றும் காயமடைந்த பெண்கள்
ஈரோடு: கொடுமுடி அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். பெண்கள் இருவர் படுகாயம் அடைந்தனர்.
ஈரோடு திருநகர் காலனி, ராமமூர்த்தி நகரை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் விக்னேஸ்வரன்(29). எல். ஐ.சி. முகவர். இவர் மனைவி துர்கா(25), துர்காவின் தங்கை ஸ்ருதி(23) ஆகியோருடன் திங்கள்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் கொடுமுடி அருகே வெங்கம்பூரில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு, மாலையில் வீடு திரும்பியுள்ளனர்.
அப்போது மலையம்பாளையம் காவல் நிலையம் அருகே வளைவில் திரும்பும்போது எதிரில் கரூர் நோக்கி சென்ற வேன் மோதியது. இதில் விக்னேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். துர்கா, ஸ்ருதி இருவரும் படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், விக்னேஸ்வரன் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். படுகாயம் அடைந்த இருவரும் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மலையம்பாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.